Published : 11 Apr 2023 05:17 AM
Last Updated : 11 Apr 2023 05:17 AM
சென்னை: 2.84 லட்சம் பொதுமக்களிடமிருந்து ரூ.13,700 கோடி வரை முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவு உi்பட 4 நிறுவனங்களின் வழக்கு விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடமிருந்து அமலாக்க துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாத வட்டியாக 30 சதவீதம் வரை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியது. இதை நம்பி சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டமுதலீட்டாளர்கள் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர்.
ஆனால், முதலீட்டாளர்களுக்கு மாத வட்டி கொடுக்கவில்லை. அசல் பணத்தைகூட வழங்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 11 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய ‘ஹிஜாவு நிறுவனம் மற்றும் அதன் 18 துணை நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு மாதம் 15 சதவீதம்வட்டி தருவதாக கூறியது. இதை நம்பி 89,000 முதலீட்டாளர்கள் ரூ.4,400 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டது.
கிண்டியில் செயல்பட்ட ‘எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.’ நிறுவனம், 84,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5,900 கோடி முதலீடு பெற்று வட்டியும், அசலும் கொடுக்காமல் ஏமாற்றியது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ‘எல்பின்’இ.காம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 11,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.962 கோடிமுதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பொதுமக்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்குமுதலீட்டு தொகை பெற்று மோசடி செய்திருந்தது கண்டறியப்பட்டது.
ரூ.13,700 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதால் இது தொடர்பான வழக்கு விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடமிருந்து பெற்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிமாற்றம் ஏதும்செய்துள்ளதா என முதல்கட்ட விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
அடுத்த கட்டமாக இந்நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT