Published : 11 Apr 2023 05:27 AM
Last Updated : 11 Apr 2023 05:27 AM
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பேசிய பல்வேறு சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): முதல்வரின் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. சட்டப்பேரவையின் உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் பணிகள் குறித்து அரசியலமைப்பு சட்டத்திலும், பல்வேறு ஆணையங்கள் பல்வேறுஉறவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநராக பொறுப்பேற்றபோது அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுவிட்டு, இந்துத்துவா நாடு என்று கூறி வருகிறார். அவருக்கு இந்த சட்டங்கள் பொருந்துமா?
ஜி.கே.மணி (பாமக): சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய இணையவழி சூதாட்ட மசோதாவை இரண்டாவது முறையும் நிறுத்தி வைத்ததன் மூலம் உள்நோக்கம் கொண்டவராக ஆளுநர் உள்ளார். மாநில நலனுக்கு எதிராக உள்ளார்.பாமக சார்பில் அவரது நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிந்தனைச்செல்வன் (விசிக): தமிழகம் இரண்டாவது விடுதலைபோராட்டத்தை நடத்தும் நிலையில்உள்ளது. வெளிப்படையாக, தொடர்ச்சியாக மதச்சார்பின்மைக்கும், சமூக நீதிக்கும் எதிராக ஆளுநர் பேசுவது கண்டனத்துக்குரியது. காலனி ஆதிக்க மதிப்பீடான ஆளுநர் என்பது மாற்றப்பட வேண்டும். ராஜ்பவனில் குடியிருக்கும் உரிமை முதல்வருக்குதான் உள்ளது.
நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஆளுநரின் நடவடிக்கைகளை எப்படி விமர்சிப்பது என்பது தெரியவில்லை. எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரையும் மத்திய அரசையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): மக்களுக்கான சட்ட மசோதாக்களுக்கு இசைவளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தமிழக நலனுக்கு, உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.
சதன் திருமலைக்குமார் (மதிமுக): மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றுவது சட்டப்பேரவையின் உரிமை. இந்த உரிமையை மீறும்வகையில் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): தமிழக மக்களுக்கும், அரசுக்கும் நண்பராக இல்லாத ஆளுநர் ஒரு நிமிடம்கூட தமிழக ஆளுநராக நீடிப்பதற்கு எந்தவித தார்மிக உரிமையும் இல்லை. அரசமைப்பு சட்ட மாண்புகளை மீறி செயல்படும் தமிழக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, போராட உறுதியேற்க வேண்டும்.
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் நிராகரித்தால், ஆளுநர் மாளிகை செலவுக்கான நிதி மசோதாக்களை இங்கு நிறைவேற்றி அனுப்புவதில் வேதனை உள்ளது. இதோடு நிறுத்தி விடாமல் இன்னும் நடவடிக்கைகளை முதல்வர் துரிதப்படுத்த வேண்டும்.
தி.வேல்முருகன் (தவாக): ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் கொண்டுவரவேண்டும். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் தமிழகத்தில் ஒரு நிமிடம்கூட இருக்க தகுதியில்லை. இவ்வாறு அவர்கள் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT