Published : 11 Apr 2023 05:32 AM
Last Updated : 11 Apr 2023 05:32 AM
சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான தீர்மானம் மற்றும் அரசினர் தீர்மானங்கள் முன்மொழியப்பட இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச வாய்ப்பு கேட்டார். தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
பேரவைத் தலைவர் அப்பாவு: எதிர்க்கட்சி கொறடா என் அறைக்கு வந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் நேரமில்லா நேரத்தில் எதுவும் பேசவில்லை என்றாரே?
(ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுந்து நின்று, பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர்.)
பேரவைத் தலைவர்: நீங்கள் எழுந்து பேச வாய்ப்பு கேட்டால் நான் மறுப்பதில்லை. ஒத்துழைப்பு கொடுங்கள், நாளை எடுத்துக் கொள்ளலாம். தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள்.
(தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கும்படி அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று வலியுறுத்தினர்.)
அவை முன்னவர் துரைமுருகன்: அவர் இவ்வாறு வலியுறுத்துவதால், அனுமதிக்கலாம்.
பழனிசாமி: எதிர்க்கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டதை பலமுறை தெரிவித்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். கேட்டதற்கு வழக்கு இருப்பதாக கூறினீர்கள். வழக்கிலும் தீர்ப்பு வந்துவிட்டது. அதன்பிறகும் ஏற்கவில்லை.
பேரவைத் தலைவர்: வழக்கு தொடர்பாக ஒருபோதும் கூறவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் விதிப்படி இடம் உள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு விதிப்படி இல்லை. உறுப்பினர்கள் 60 பேர் என் அறைக்கு வந்து கேட்டனர். இருக்கை தொடர்பாகவும் கேட்டனர். உங்கள் அருகில் அமர இடம் கேட்டனர். அதற்கு நீண்ட விளக்கத்தை அவையில் அளித்துள்ளேன்.
பழனிசாமி: சட்டப்பேரவையில், எதிர்க்கட்சியினர் கருத்துகள், எதிர்க்கட்சி தலைவர் பேச்சுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை.
பேரவைத் தலைவர்: நேரடி ஒளிபரப்பில் எதையும் இருட்டடிப்பு செய்யவில்லை.
பழனிசாமி: தேர்தல் அறிக்கையில் கூறியபடி சட்டப்பேரவையில் கருத்துகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்பட்டது. எங்கு ஒளிபரப்பு செய்தீர்கள்?
பேரவைத் தலைவர்: நீங்கள் ஏதோ முடிவில் வந்திருப்பதுபோல் தெரிகிறது.
பழனிசாமி: எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபோது மாற்றாக ஒருவரை நியமிக்கலாம். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். அது கடைபிடிக்கப்படாததைக் கண்டிக்கிறோம். சட்டப்பேரவையின் விதிகள் தளர்த்துவதையும் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு கூறிவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT