Published : 11 Apr 2023 05:39 AM
Last Updated : 11 Apr 2023 05:39 AM

ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதிமீறல் - பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதிமீறல்கள் உள்ளன. இனி, விதிகள்படியே நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

ஆளுநர் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதுபேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ‘‘ஆளுநருக்கான விருப்புரிமை நிதியைக் கடந்த ஆட்சியாளர்கள் ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர். அதில் ‘பெட்டி கிரான்ட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்டி கிரான்ட் என்பது ரூ.5 கோடியா? ஆளுநர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள். நிதியை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில், அதாவது ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை செலவுகள் மற்றும் விருப்புரிமை நிதி என்ற வகையில் நிதி ஒதுக்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ரூ.2.41 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.2.86 கோடியாகவும், இந்த ஆண்டு ரூ.3.63 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செலவு திமுக ஆட்சிக்கு வரும்போது ரூ.11.60 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூ.15.93 கோடியாகவும், இந்த ஆண்டு ரூ.16.69 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

விருப்புரிமை நிதியைப் பொருத்தவரை, 2011-12 முதல் 2015-16 வரை ரூ.8 லட்சமாக இருந்தது. 2016-17-ல் ரூ.5.44 லட்சம், 2018-19-ல் ரூ.1.57 லட்சமாக இருந்தது. அதே ஆண்டில் 3 மாதங்களில் ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் ரூ.5 கோடி நிதி ‘பெட்டி கிரான்ட்’ நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெட்டி கிரான்ட் என்பது, அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இந்த நிதி, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி, திருமண உதவி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்த நிதியில் விதிகள் மீறப்பட்டுள்ளன. `அட்சய பாத்திரா' என்ற நிறுவனத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வேறு செலவுகளுக்கும் இந்நிதி மாற்றப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.18.38 கோடி நிதியில், ரூ.11.32 கோடி எதற்கு செலவிடப்பட்டுள்ளது என்பது கணக்கில் இல்லை. இது விதி மீறல். எங்களுக்குத் தெரிந்த அளவில், ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அறக்கட்டளை அல்லது வேறு கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக நிதித் துறையினர் அளித்த தகவல்படி, செப்டம்பர் 2021-க்குப் பிறகான ரசீதுகள்படி, யுபிஎஸ்சி மாணவர் கூட்டத்துக்கு ரூ.5 லட்சம், தேநீர் விருந்து ரூ.30 லட்சம், ராஜ்பவன் நிகழ்ச்சி ரூ.3 லட்சம் என்றெல்லாம் உள்ளது. இதுதவிர, ஊழியர்களுக்கு போனஸாக ரூ.18 லட்சம், ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் தரக் கூடாது என்ற விதியும் மீறப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது.

இனி நிதி விதிமீறல்கள் தடுக்கப்படும். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, விதிகளில் இருப்பதுபோன்று மட்டுமே செலவழிக்க முடியும் என்பது கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x