Published : 18 Sep 2017 01:40 PM
Last Updated : 18 Sep 2017 01:40 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் நீர் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் (கேஆர்பி) கட்டப்பட்டுள்ளன. கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 42.48 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 568 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50.95 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 627 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசன கால்வாயிலும், ஆற்றிலும் 374 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கடந்த 25 நாட்களாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மாவட்டத்தில் நீர்மேம்பாட்டு திட்டங்களை முறையாக செயல் படுத்தாததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் அமைத்துக் கொண்டு சென்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பி இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து எப்பொழுதும் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. பாசனக் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் 200 ஏரிகளில் 12 ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன.
இம்மாவட்டத்தில் நீர்மேம்பாட்டு திட்டங்களை பொதுப்பணித்துறையும், அரசும் முறையாக செயல்படுத்தவில்லை. இனியாவது அணையைத் தூர் வாரவும், பாசன கால்வாய்களை சீரமைத்து, ஆழியாளம், உலகம், வாணிஒட்டு உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீர் சேமித்து வறட்சியைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாம்பாறு அணை நீர்ப் பாதுகாப்பு இயக்க தலைவர் கே.எம்.சவுந்திரராஜன் கூறும் போது, ‘‘வறட்சியால் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை குறைவாகப் பெய்தாலும், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் செல்கிறது. குறுகிய காலத்தில் தண்ணீரைச் சேமிக்கும் வகையில் நீர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்க வேண்டும். நெடுங்கல் அணையில் இருந்து பாரூர் ஏரிக்கும், அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரி நிரம்பி அதன் பிறகே பாம்பாறு அணைக்கும் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக எளிதில் நீரைச் சேமிக்க முடியாமல் போகிறது. எனவே, நெடுங்கல் - பாம்பாறு இடையே பாதாளக் கால்வாய் அமைக்க வேண்டும்,’’ என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கம் (வெங்கடாசலம்) மாநில செயலாளர் லேகாபிராம் கூறும் போது, ‘‘மாவட்டத்தில் கால்வாய்களைப் பராமரிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. புதிய கால்வாய்கள் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் விட வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாணிஒட்டு அருகே தடுப்பணை கட்டி பெரிய ஏரியான படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு சென்றிருந்தால், பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காட்டாகரம் வரை 36 ஏரிகள் பயனடைந்திருக்கும்,’’ என்றார்.
தண்ணீர் வீணாகவில்லை
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் கூறும் போது, ‘‘கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மூலம் 66 ஏரிகள் நிரம்பியுள்ளது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீர் கடலில் கலப்பதில்லை. சாத்தனூர் அணைக்கு செல்கிறது.
சாத்தனூர் அணையில் மொத்த உயரமான 117 அடியில், 95 அடிக்கு தண்ணீர் உள்ளது. சாத்தனூர் அணை நிரம்பினாலும், அதற்கு கீழ் உள்ள 3 தடுப்பணைகள் நிரம்பி பின்னர் தான் கடலுக்கு தண்ணீர் செல்லும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த பகுதிகளில் பெய்த கனமழையின் போது தண்ணீர் கடலில் கலந்ததது அதன்பிறகு ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சாத்தனூர் அணையைக் கடக்கவில்லை,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT