Published : 11 Apr 2023 06:25 AM
Last Updated : 11 Apr 2023 06:25 AM

தருமபுரியில் கடைக்கோடியில் அமைந்துள்ள வளர்ச்சியில் பின்தங்கியுள்ள சிட்லிங் மலைக்கிராமம்

அரூர்: வளர்ச்சியில் பின்தங்கியள்ள சிட்லிங் மலைக்கிராமத்தில் வங்கி, சமுதாயக்கூடம், தரைவழியில் மின் பாத உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது சிட்லிங் ஊராட்சி. சுற்றிலும் மலைகள் சூழ பள்ளத்தாக்குப் பகுதியில் சிட்லிங் அமைந்துள்ளது. அரூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிட்லிங், வேலனூர், எஸ். தாதம்பட்டி, ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 42 கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் வசிக்கின்றனர்.

எஸ்.தாதம்பட்டி, மேல் தண்டா, கீழ்தண்டா கிராமங்கள் தவிர மற்ற 39 கிராமங்களிலும் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

கடைக்கோடியில் அமைந்துள்ள தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இம்மக்களுக்கு அரசின் திட்டங்களோ, பலன்களோ சென்று சேர்வதில் பெரும் இடைவெளி நிலவி வருகின்றது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிட்லிங் ஊராட்சியில் உள்ள மகளிர் குழுவினர் வங்கி தேவைக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டப்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

எனவே, சிட்லிங் ஊராட்சியிலேயே கிராம வங்கி தொடங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் திருப்பூர், கோவை உள்ளிட்டபகுதிகளுக்கு தறித் தொழிலுக்கு செல்கின்றனர். அங்கு பயிற்சி பெற்ற சிலர் இங்கு தறித் தொழிலை தொடங்கியுள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட தறிகள் உள்ள நிலையில் காட்டுப்பகுதி வழியாக வரும் மின் பாதை அமைந்துள்ளதால் மரக்கிளைகள் முறிந்து விழுவது போன்ற பிரச்சினைகளால் அடிக்கடி மின் தடை மற்றும் போதிய மின்சாரம் கிடைப்பதில்லை.

எனவே, இப்பகுதியில் தரை வழியில் மின் இணைப்பும், கூடுதலாக மின்மாற்றியும் அமைக்க வேண்டும். ஊராட்சியின் மையப்பகுதியான சிட்லிங்கில் திருமண மண்டபம், சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊராட்சித் தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஊராட்சிக்குட்பட்ட மலைக் கிராமமான காரப்பாடி கிராமத் தில் இதுவரை மின் வசதியே இல்லாமல் இருந்தது. அங்கு மின்வசதி ஏற்படுத்தி, பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.3 லட்சம் செலவில் 50 பேருக்கு குடியிருப்புகள் கட்டி தரப்பட்டுள்ளன.

வனப்பகுதி குளத்து நீரே குடிநீர் என்ற நிலையை மாற்றி பயனின்றி இருந்த கிணறை ஆழப்படுத்தி மோட்டார் அமைத்து குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு முதல்முறையாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x