Published : 11 Apr 2023 06:36 AM
Last Updated : 11 Apr 2023 06:36 AM
சென்னை: காங்கிரஸ் ஆட்சியிலும் சிஆர்பிஎப் தேர்வு ஆங்கிலம், இந்தியில்தான் நடத்தப்பட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிஆர்பிஎப் ஆள்சேர்க்கை அறிவிக்கை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ``சிஆர்பிஎப் ஆள்சேர்ப்புக்கான கணினி தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தாய்மொழியில் தேர்வைஎழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக அங்கம் வகித்திருந்த கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும், சிஆர்பிஎப் கணினி தேர்வுகள்,ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்டபோது தமிழக இளைஞர்கள் ஏன் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை? சொந்த மாநிலத்திலேயே தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? இந்தி பேசுவோருக்கு சாதகமாக திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்துகொண்டது ஏன் என முதல்வர் விளக்க வேண்டும்.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணியாற்ற வேண்டும் என்றவிதி உள்ளதால், அலுவல் மொழியான இந்தியிலோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலோ அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதாலேயே இந்த அறிவிக்கை என்பது தெளிவுபட குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT