Published : 11 Apr 2023 06:52 AM
Last Updated : 11 Apr 2023 06:52 AM

ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது; அரசுடன் இணைந்து செயல்பட்டு மாநிலத்தை முன்னேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னையில் நேற்று நடைபெற்ற அகில இந்திய ஓபிசி ரயில்வே ஊழியர்கள் சங்க மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணியை மாலை அணிவித்து வரவேற்றார் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.அப்சல். உடன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், பாமக வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: ஆளுநர் என்பவர் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மாநில அரசுடன் இணைந்து மாநிலத்தை முன்னேற்ற வேண்டும். அரசியல் செய்யக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

அகில இந்திய ஓபிசி ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு, சென்னை அயனாவரத்தில் உள்ள சங்கத்தின் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.அப்சல் தலைமையில் நடந்த இம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாமக தலைவர் அன்புமணி, கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கை தமிழகத்திலும், இந்தியாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என்பதாகும்.

அப்போதுதான் உண்மையான சமூக நீதி கிடைக்கும். ஆளுநருக்கு எதிராக எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அதேநேரத்தில் ஆளுநர் என்பவர், ஆட்சியில் இருக்கும் மாநில அரசுடன் இணைந்து அந்த மாநிலத்தை முன்னேற்ற வேண்டும். அரசியல் செய்யக் கூடாது.

ஆளுநரின் பொறுப்பு என்பது அரசியல் சார்பற்ற ஒரு பொறுப்பு. அவர் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். ஆனால் இப்போது இருக்கிற ஆளுநர் அண்மைக் காலமாக, அவர் சார்ந்த அல்லது அவரை நியமனம் செய்த அந்தக் கட்சியைச் சார்ந்த கொள்கைகளை கருத்துகளை, மற்ற கட்சிகளுக்கு எதிரான கொள்கைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாகவும், அதன்மூலம் சிலர் போராட்டம் நடத்தியதாகவும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்க வேண்டும், ஆதாரம் இருந்தால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான அறிக்கையில், இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. எனவே ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஆளுநர் தெரிவிக்கக் கூடாது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுடன் ஒருமித்த கருத்து உடைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம். அதற்கேற்ற வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x