Published : 21 Sep 2017 11:20 AM
Last Updated : 21 Sep 2017 11:20 AM

அமைச்சர் பதவி கொடுக்காததால் அதிருப்தியா? - எடப்பாடிக்கு நெருக்கடி தரும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ

அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியால்தான் விவி. ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, திடீரென பேட்டி அளித்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

மதுரை அதிமுகவில் அமைச்சர்களாக செல்லூர் கே.ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் இருந்தாலும் கட்சியில் புறநகர் மாவட்டச் செயலாளரும், வடக்கு எம்எல்ஏவுமான விவி. ராஜன் செல்லப்பாவுக்கு கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடம் செல்வாக்கு உண்டு. இவர் எம்ஜிஆர் காலம் முதலே அரசியல் செய்து வருபவர். எம்.பி., யாகவும், மதுரை மேயராகவும் இருந்துள்ளார்.

தற்போது எடப்பாடி அணியில் இருக்கிறார். கடந்த ஆட்சியில் இவர் மேயராக இருந்தபோது, சட்டப்பேரவை தேர்தல் வந்தது. ஜெயலலிதா அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். மேயர் பதவியையே ஜெயலலிதா ராஜினாமா செய்யச் சொன்னதால் அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால், மதுரை மாவட்டத்தில் வழக்கம்போல செல்லூர் கே.ராஜூவுக்கும், ஆர்.பி. உதயகுமாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தி அடைந்தாலும், வெளிக்காட்டி கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்தாலும் சசிகலா அணியிலேயே நீடித்தார். அவர் பெங்களூரு சிறைக்கு சென்றபிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் நீடித்தார். ஆனால் சசிகலாவையும், டிடிவி. தினகரனையும் அவரது அணியில் உள்ள மற்றவர்களைப் போல விமர்சிக்கவே இல்லை.

அதனால், இவர் டிடிவி. தினகரன் அணிக்கு செல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால், இவர் டிடிவி. தினகரன் பங்கேற்ற மேலூர் பொதுக் கூட்டத்துக்குச் செல்லவில்லை.

இவர் செல்லாததால், இவரது ஆதரவு புறநகர் மாவட்ட 3 எம்எல்ஏ-க்களும், நிர்வாகிகளும் டிடிவி. தினகரன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த டிடிவி.தினகரன், புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விவி.ராஜன் செல்லப்பாவை நீக்கினார். அப்போதும் கூட செய்தியாளர்களை சந்தித்த விவி. ராஜன்செல்லப்பா, ‘‘டிடிவி.தினகரன் அவசரப்பட்டு விட்டார். தன்னை நீக்குவதற்கு சசிகலா ஒப்புதல் அளித்ததாக டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சிறையில் இருக்கும் அவர் எப்படி இதற்கு ஒப்புதல் அளிக்க முடியும், ’’ என நாகரீகமான கேள்விகளை மட்டும் எழுப்பி விட்டு மறந்தும் கூட அவர்களை விமர்சிக்கவில்லை. அடுத்த சில நாளில் விவி.ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியுமான ராஜ் சத்தியன், திடீரென, ‘‘நான் டிடிவி.தினகரன் அணியில் இணையப் போகிறேன். அவரால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்’’ என்றார். இவரது இந்த முடிவு, கடைசியில் விவி.ராஜன் செல்லப்பாவின் அரசியலுக்கே சிக்கலை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், ராஜன் செல்லப்பா, தனது மகனை சமாதானப்படுத்தி டிடிவி.தினகரன் அணியில் இணையாமல் பார்த்துக் கொண்டார்.

அப்போது எடப்பாடி அணியில் இருந்த பலர், ‘‘மகனை விட்டு ராஜன்செல்லப்பா ஆழம் பார்க்கிறார் என்று விமர்சித்தனர். ஆனால், விவி. ராஜன் செல்லப்பா தனது அரசியல் அனுபவத்தால் அந்த விமர்சனத்தை சாதுர்யமாக சமாளித்தார்.

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் பேரவைத் தலைவர் 18 எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்தார். இந்த சூழ்நிலையில், நேற்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்த ராஜன்செல்லப்பா, முதல்வர் மதுரைக்கு அறிவித்த திட்டங்கள் அறிவிப்புடன் நின்று விட்டதாக விமர்சித்தார்.

அவர் பொது நலத்தோடு இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினாரா அல்லது தனக்கு பின்னால் வந்த செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் அமைச்சர்களாகி, அவர்களுக்குப் பின்னால் அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என்ற விரக்தியில் தனக்கும் அமைச்சர் பதவி கேட்டு முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கிறாரா என்ற பரபரப்பு மதுரை அதிமுகவில் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதை மறுத்த ராஜன்செல்லப்பாவின் ஆதரவாளர்கள், ‘‘ஜெயலலிதா இருந்திருந்தால், தற்போது ராஜன் செல்லப்பா அமைச்சர் ஆகி இருப்பார். அது நடக்கவில்லை என்பதற்காக அவர் டிடிவி. தினகரன் அணிக்கும் செல்லவில்லை. மாறாக அவர், மதுரை மாவட்ட எம்எல்ஏ-க்களை டிடிவி.தினகரன் அணிக்கு செல்லவிடாமல் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அது முதல்வருக்கே தெரியும். அமைச்சரைவிட அதிகமான அதிகாரத்தை ஏற்கெனவே அவர் மேயராக இருந்தபோது பார்த்துவிட்டார்.

அவருக்கு தன்னை வெற்றிபெற வைத்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இருக்கிறது. குறிப்பாக, மாநகராட்சிக்கு அறிவித்த பெரியாறு குடிநீர் திட்டம், செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய் தூர்வாரும் திட்டங்களை நிறைவேற்றவில்லை. மாட்டுத்தாவணிக்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி இருக்கும்போதே இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றால், பிறகு இவர்கள் எப்போது நிறைவேற்ற போகிறார்கள் என்பதுதான் அவருடைய கேள்வியாக இருக்கிறது. மற்றபடி, அவர் ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை. சசிகலாவை நீக்குவதில் அவருக்கு மாற்று கருத்து இருந்தாலும், கட்சியில் பெரும்பான்மையானவர்கள் அவரை நீக்கச் சொன்னபோது அதை ஏற்று கையெழுத்திட்டார். இந்த ஆட்சியும், கட்சியும் இன்னும் சிறப்பாக செயல்படவே அவர் சில ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்து அழுத்தம் கொடுத்துள்ளார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x