Published : 10 Apr 2023 09:51 PM
Last Updated : 10 Apr 2023 09:51 PM
சென்னை: மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு இம்மாதம் 12-ம் தேதியன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெறும் என்றும் அக்கூட்டணியின் தலைவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வருகிற 12-04-2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் ஏற்கெனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இன்று (10.4.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்நிலையில், இன்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர், ‘ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளார்.
இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி. எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும்,
மேலும் தமிழ்நாடு ஆளுநரின் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் - விளக்கமும் அளிக்காத காரணத்தினால், 12-4-2023 அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12-4-2023 (புதன்கிழமை) அன்று மாலை 5 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் ‘‘மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக"" நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT