Published : 10 Apr 2023 06:53 PM
Last Updated : 10 Apr 2023 06:53 PM
சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவரின் கணவர் முகமது ரஹீம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிட்லப்பாக்கத்தில் உள்ள எவர் கிரீன் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் முகமது ரஹீமின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் நேரில் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவர் கிரீன் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தாக்கியதால், தனது கணவர் உயிரிழந்துள்ளார் எனக்கூறி, உரிய இழப்பீடு கேட்டு அவரது மனைவி கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், "சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள அந்த மறுவாழ்வு மையம் உரிய அனுமதி எதுவும் பெறவில்லை" என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், "சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, நான்கு மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட எவர் கிரீன் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவ இயக்குனருக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களிலும் அவ்வப்போது அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT