Published : 10 Apr 2023 06:07 PM Last Updated : 10 Apr 2023 06:07 PM
நெல்லையில் போக்சோ கோர்ட், கோவை சட்டக் கல்லூரிக்கு ரூ.6 கோடியில் சுற்றுச்சுவர்: சட்டத் துறையின் புதிய அறிவிப்புகள்
சென்னை: திருநெல்வேலியில் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் நீதி நிர்வாகம் மற்றும் சட்டத் துறை அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் - நீதி நிர்வாகம்:
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2012ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்காக கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் தற்போது இயங்கிவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை பிரித்து தனியாக ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றமும் அமைக்கப்படும்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டடத்தின் முதல் தளத்தை புதுப்பித்து, வணிக நீதிமன்றங்கள் செயல்பட இடமளிக்கப்படும்.
சேலம் மாவட்டம் மேட்டூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்களில் மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற கட்டடத்திற்கு, மாற்றுத்திறனாளி மற்றும் பிற வழக்காடிகளும் பயன்படுத்தக்கூடிய வகையிலான மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்படும்.
நீதிபதிகளின் பயன்பாட்டிற்கென 818 மடிக்கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் (Printers) வாங்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை ஆயத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்களின் எழுத்தர்கள் மற்றும் வழக்கு தொடுத்த பொதுமக்களின் பயன்பாட்டில் தற்போதுள்ள பழைய மின்னணு காட்சிப் பலகைகளுக்குப் பதிலாக, புதிய மின்னணு காட்சிப் பலகைகள் வாங்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பயன்பாட்டிற்கு, தற்போதுள்ள கியோஸ்க் கருவிகளுக்கு பதிலாக, 11 புதிய தொடு திரை கியோஸ்க் கருவிகள் வாங்கப்படும்.
புதியாதாக உருவாக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், தலா ஓர் உதவி இயக்குநர் மற்றும் உரிய தேவையான பணியிடங்கள், இதர வசதிகளுடன் கூடிய குற்றவழக்கு தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை தோற்றுவிக்கப்படும்.
குற்ற வழக்கு விசாரணைகளை திறம்பட நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்கு தொடுப்பவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு, இணையவழி அணுகல், தரவு மற்றும் குரல் வசதி ஆகியவற்றை குற்ற வழக்குத் தொடர்வு துறைக்கு வழங்கப்படும்.
மாநிலத்திலுள்ள 1008 சார்நிலை நீதிமன்றங்களுக்கு கணினி மற்றும் உபகரணங்கள் ரூ.80 கோடி செலவினத்தில் வாங்க நிர்வாக ஒப்புதல், 2023-2024 மற்றும் 2024-2025 ஆகிய நிதியாண்டுகளில் இரண்டு கட்டங்களாக நிதி ஒப்புதல் வழங்கப்படும்.
குற்றவழக்குத் தொடர்வு இயக்ககத்தின் பயன்பாட்டிற்கு, தற்போது பயன்பாட்டிலுள்ள 10 மேசை கணிகளுக்கு பதிலாக புதியதாக 10 மேசை கணினிகளும் மற்றும் 5 அச்சுப்பொறிகள் (Printers) வாங்கப்படும்.
குற்றவழக்குத் தொடர்வு இயக்ககத்தின் கீழுள்ள சார்நிலை அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு, தற்போது பயன்பாட்டிலுள்ள மேசை கணினி மற்றும் அச்சுப்பொறிகளுக்குப் (Printers) பதிலாக, 28 மேசை கணினிகளும், 28 அச்சுப்பொறிகளும் (Printers) வாங்கப்படும்.
சட்டத்துறை
கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகலுக்கு அறைகலன்கள் (Furniture) மற்றும் மர இரும்பு தளவாடங்கள் வசதி ரூ.1.58 கோடி செலவில் செய்து தரப்படும்.
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தினைச் சுற்றிலும் ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நூலகத்திற்கு கூடுதலாக சட்டப் புத்தகங்கள் வாங்கிட ரூ.65 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படும்.
அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் இளநிலை சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 'வழக்காடுதல் கலை' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்தப்படும்.
WRITE A COMMENT