Published : 10 Apr 2023 04:07 PM
Last Updated : 10 Apr 2023 04:07 PM
சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், அரசின் தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதனை எதிர்த்து பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும் அரசின் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்தார்.
முன்னதாக, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி மற்றும் எம்.ஆர். காந்தி ஆகியோர் பேரவையிலிருந்து வெளியேற முயன்றனர். ஆனால், தனித் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. இதனால், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் வெளியேற முடியவில்லை. எனவே, இந்தத் தீர்மானத்தில் அவர்களும் பங்கேற்க நேரிட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்றையக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பின்னர், பேரவைக்கு வெளியே பாஜக எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி மற்றும் சரஸ்வதி செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது காந்தி கூறியது: "தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வந்ததை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்கிறது” என்று கூறினார்.
பின்னர் எம்எல்ஏ சரஸ்வதி கூறியது: "திமுக அரசு எப்போது ஆட்சிக்கு வந்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதித்தனர். இப்படி அனைவரையும் அவமதிப்பதில் இவர்கள் குறிக்கோளுடன் இருக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக ஆளுநர் கோப்புகளை நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆளுநர் அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். சட்டத் திருத்தங்களை எல்லாம் பார்த்துவிட்டு சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார். ஆளுநர் செய்வதில் எல்லாம் குற்றம் காணும்போக்கில் இந்த அரசு செயல்படுகிறது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என்று அவர் கூறினார். | வாசிக்க > மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம்: தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT