Published : 10 Apr 2023 03:28 PM
Last Updated : 10 Apr 2023 03:28 PM

“நமது ஆளுநருக்கும் ஒரு நப்பாசை...” - பேரவையில் துரைமுருகன் பேச்சு

துரைமுருகன் | கோப்புப்படம்

சென்னை: "மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சிக்கு அம்மாநில ஆளுநரால் தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டது. இதனால், ஆளுநரைப் பாராட்டி, அவருக்கு மத்திய அரசு ராஜ்யா சபாவில் ஒரு பதவியைக் கொடுத்தார்கள். அதைப் பார்த்து நமது ஆளுநருக்கும் ஒரு நப்பாசை" என்று சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும் அரசின் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்தார்.

பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது, அவை முன்னவர் துரைமுருகன் பேசியது: "இந்தத் தீர்மானத்தை, சரியான நேரத்தில், முதல்வர் கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில்கூட, கொஞ்சங்கூட பிசிறு இல்லாமல் நாகரிகத்துடன், நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாராட்டுகிறேன்.

ஏதோ, ஆளுநருக்கு எதிராக கருத்தைக் கொண்ட ஒரு தீர்மானம் வருகிறது என்றவுடன், எதிர்க்கட்சிகள் அப்படியே துள்ளிக் குதித்து, இதில் எப்படி நாங்கள் கலந்துகொள்வோம் எனக் கூறி வெளியே சென்றிருந்தாலும் பரவாயில்லை. சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்தி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். சட்டமன்ற விதிகளை எப்படி தளர்த்துவது என்று கற்றுக்கொடுத்ததே அவர்கள்தான்.

சட்டமன்ற விதியை தளர்த்திதான் எதிர்க்கட்சியினர் சென்னா ரெட்டி மீது பாய்ந்தார்கள். அதேவிதிகளை நாங்கள் இன்று தளர்த்தும்போது கேள்வி கேட்கின்றனர். எங்கள் மார்பை உயர்த்துவதற்காக ஆளுநருக்கு எதிரான இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலைக்கு வந்துவிட்டதே என்ற ஒரு கனத்த இதயத்துடன் முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பார்.

ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்று திமுக ஆரம்பித்த காலத்திலேயே பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆளுங்கட்சியாக வருவோம் என்று தெரியாமல் இருந்த காலத்திலேயே நாட்டிற்கு ஆளுநர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி திமுக. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவி கொண்டு வரப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி வகிக்கும் மாநிலத்தில் யாரோ ஒருவரை ஆளுநராக நியமித்தால், அவர் ஆட்சிக்கு தொல்லை கொடுப்பார் என்று ஆயிரம் முறை எடுத்து கூறியிருக்கிறோம். எங்களைப் போலவே பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், மத்திய அரசுக்கு மாநில அரசை ஆட்டிப்படைப்பதற்கு, அரசமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி கலைப்பதற்கு, தங்களுக்கு ஒரு ஏஜென்ட் வேண்டும் என்பதற்காக இந்த ஆளுநர் பதவியை உருவாக்கி கொடுத்தார்கள். இந்திய அளவில் பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு காரணம் ஆளுநர்கள்தான். கேரளாவில் முதன்முதலாக நம்பூதரி பாட்டின் ஆட்சி ஆளுநரால் கலைக்கப்பட்டது. அதன்பிறகு மேற்கு வங்கத்தில் நடந்தது.

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சிக்கு அம்மாநில ஆளுநரால் தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டது. இதனால, ஆளுநரைப் பாராட்டி, அவருக்கு மத்திய அரசு ராஜ்யா சபாவில் ஒரு பதவியைக் கொடுத்தார்கள். அதைப் பார்த்து நமது ஆளுநருக்கும் ஒரு நப்பாசை. அனைத்து மாநிலங்களிலுமே ஆளுநர்களால்தான் பிரச்சினையே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் அல்ல.

தமிழகத்திலும் அந்த நிலை வந்தது. சுமூக நிலையை நாங்கள் கையாண்டோம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால், முதல்வருடன் நாங்களும் நேரில் சென்று ஆளுநரைச் சந்தித்து பேசியிருக்கிறோம். ஆனால், பேசினோமே தவிர காரியம் எதுவும் நடக்கவில்லை. அதுகூட பரவாயில்லை அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருப்பது இல்லை" என்று அவர் பேசினார். | வாசிக்க > மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம்: தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x