Published : 10 Apr 2023 01:27 PM
Last Updated : 10 Apr 2023 01:27 PM

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம்: தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

பேரவையில் நிறைவேற்ப்பட்ட தீர்மானம்

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், அரசின் தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது ஆளுநரின் பணி குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார். அதில், சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை பல கருத்துகளை ஆளுநர் பேசி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வரும் 12-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும் அரசின் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி சட்டன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, அவை முன்னவர் துரைமுருகன் உள்ளிடோர் பேசினர். இதனைத் தொடர்ந்து, அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x