Published : 10 Apr 2023 06:20 AM
Last Updated : 10 Apr 2023 06:20 AM

பொள்ளாச்சி அருகே பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதி கோரி வனத்துறை அலுவலகம் முற்றுகை

டாப்சிலிப்பில் உள்ள வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் .

பொள்ளாச்சி: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி, வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில், பரம்பிக்குளம் செல்லும் வழியில் எருமைபாறை வனக்கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் அதிகமான காடர் குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர்.

தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் ஆகியவற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பல தலைமுறைகளாக காடுகளில் வசிக்கும் இவர்களுக்கு இன்றுவரை அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை.

குடியிருப்புக்கு அருகே மின்கம்பங்கள் சென்றாலும், அரை நூற்றாண்டுக்கு மேலாக இன்னும் மின்வசதி கிடைக்கவில்லை. மழையில் கரையும் மண்சுவரும், இரவில் ஒளிரும் மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே துணையாக உள்ளது. மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் படிப்பதற்கு மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உலாந்தி வனச்சரகத்திலுள்ள பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனக் கோரி, டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறும்போது, "ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே கேரளா மாநிலத்தின் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள், நடைபாதைகள், வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஆனால், இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசு மறுக்கிறது. குறிப்பாக, எருமைபாறை பழங்குடியின கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க மின்மாற்றி அமைக்கப்பட்டும், இன்றுவரை மின்இணைப்பு வழங்கவில்லை.

கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு நிலத்தடியில் புதைவட மின்கம்பி அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும், சாலை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். பழங்குடியினர் மேம்பாட்டுக்கு என வனத்துறை சோதனைச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

உலாந்தி வனச்சரகத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வனத்துறையில் பணிபுரியும் பழங்குடியின ஊழியர்களை பணி நிரந்தரம் செய்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு அளித்த இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றுக்கு மலர் வளையம் வைத்து, உலாந்தி வனச்சரகர் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x