Published : 10 Apr 2023 05:45 AM
Last Updated : 10 Apr 2023 05:45 AM
சென்னை: ஈஸ்டர் திருநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: ஈஸ்டர் திருநாளில், எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் கருணை, இரக்கம், உள்ளடக்கம், மன்னித்தருள்வது போன்ற குணங்களை நம்முள் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வலியுறுத்துகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உலக மக்களின் நலனுக்கான நல்லகருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசுவின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள். இந்நன்னாளில், நாட்டில் சகோதரத்துவம் தழைத்து, சமூக ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரிடையேயும் மகிழ்ச்சியும் அமைதியும் சகோதரத்துவமும் நிலவட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தனி மனித வாழ்வில், சமூக வாழ்வில் மனித நேயம் உயிர்பெற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் வாழ்வில் வளமுடன், நலமுடன், இன்புற்று வாழ இறைவன் துணை நிற்க வேண்டி, ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT