Published : 20 Sep 2017 11:32 AM
Last Updated : 20 Sep 2017 11:32 AM
மதுரை வடக்குப் பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமான செல்லூர் கண்மாயை தூர்வாரும் பணி, கடந்த ஆண்டு தொடக்க விழாவோடு நின்றுபோனதால் தற்போது கண்மாயில் மண் மேவி மழைநீர் சேகரமாகாமல் மடை வழியாக வீணாக வெளியேறி வருகிறது.
ஆரம்ப காலத்தில் மீன்பிடிப்பதற்கு பரிசல்களை பயன்படுத்தும் அளவுக்கு மதுரை செல்லூர் கண்மாய் ஆழமாகவும், 300 ஏக்கரில் கடல்போல தண்ணீர் பரந்து காணப்பட்டது.
சுருங்கிப்போன கண்மாய்
சாத்தையாறு அணையின் கடைக்கோடி கண்மாயான செல்லூர் கண்மாய், மதுரை வடக்குப் பகுதி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது. நாளடைவில் பாசன நிலங்கள் முழுவதும் கட்டிடங்களாகி விட்டன. கண்மாயின் உள்ளேயே ரயில்வே நிர்வாகம் தண்டவாளம் அமைத்து கண்மாயை இரண்டாகப் பிரித்தபிறகு கண்மாய் ஆக்கிரமிப்புகள் தொடங்கின.
தற்போது 72.73 ஏக்கராக செல்லூர் கண்மாய் சுருங்கிப்போனது. கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கரையோரப் பகுதியிலும் கட்டிடக் கழிவுகள், குப்பைகள் கொட்டி கண்மாய் பாழாகி வந்தது. கருவேல மரங்களும் அதிகளவு இருந்தன.
நின்றுபோன தூர்வாரும் பணி
இதையடுத்து, செல்லூர் கண்மாயை கடந்த ஆண்டு ரூ.15 லட்சம் செலவில் தூர்வார அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற விழா விமரிசையாக நடைபெற்றது.
கண்மாயில் மேவியுள்ள 2000 கனமீட்டர் மண்ணை தூர் வார முடிவு செய்யப்பட்டது. ஆனால், தூர்வாரும் பணி தொடக்க விழாவோடு நின்று போனது.
களமிறங்கிய ‘வா நண்பா’
இந்நிலையில் மதுரை ‘வா நண்பா’ குழுவினர் அழியும் அபாயத்தில் இருந்த கண்மாயை ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணியில் களம் இறங்கினர். அவர்கள் கண்மாயில் 72 ஏக்கரில் இருந்த கருவேலம் மரங்களை பொக்லைன் வைத்து அப்புறப்படுத்தினர். கண்மாய் மையப் பகுதியில் இருந்த தனி நபர்களுடைய சாலை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தினர். கண்மாயில் 480 மீட்டர் தூரம் கரைகள் மிக மோசமாக இருந்தன. கரைகளை பலப்படுத்தி அதன்மேல் காலை, மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் நடை பயிற்சி செல்லும் வகையில் நடைபாதை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.
கண்மாய்க்குள் ஆடு, மாடுகள் நுழையாதபடி கரைகளைச் சுற்றிலும் கம்பிகளை கொண்டு பென்சிங் போட்டிருந்தனர். ஆனால், கண்மாயை ஆழப்படுத்தி தூர்வாராததால் நீர் தேங்க வாய்ப்பில்லாமல் போனது. மழை பெய்தால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் தேங்காமல் அப்படியே வெளியேறுகிறது. தற்போது கண்மாயின் பெரும்பாலான பகுதி மண் மேவி மேடாக காணப்படுகிறது. ஆனால், ‘வா நண்பா’ குழுவினர் கரைகளை உயர்த்தியதால் 6 அடி வரை தண்ணீரை கண்மாயில் தேக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், கண்மாய் கரையில் தனியார் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகமாகி விட்டன. கரை உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கினால் அது கரையோரக் கட்டிடங்களை மூழ்கடிக்க வாய்ப்புள்ளது. அதனால், கண்மாயில் தண்ணீர் தேங்காதபடி ஷட்டர் திறந்தே வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மீண்டும் ஆக்கிரமிப்பு
கண்மாயின் மற்றொரு பகுதியில் தண்ணீர் வைகை ஆற்றுக்கு செல்லும் வகையில் கால்வாய் மடை திறந்தே இருக்கிறது. அதனால், எவ்வளவு பலத்த மழை பெய்தாலும் செல்லூர் கண்மாயால் மதுரைக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் முன்புபோல் கொட்டி வருகின்றனர். கண்மாய் கரைகளையும் முன்புபோல தனி நபர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த கண்மாயை தூர்வாரினால் கோரிப்பாளையம், செல்லூர், மீனாட்சிபுரம், ஆலங்குளம், ஆனையூர், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருக்கும். ஆனாலும், தான் வசிக்கும் பகுதியின் கண்மாயை தூர்வார அமைச்சர் ஆர்வம் காட்டாதது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே. ராஜூவிடம் கேட்டபோது, ‘‘தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கிவிடும், ’’ என்றார்.
மாட்டுத் தொழுவமான கண்மாய்க் கரை
கடந்த காலத்தில் செல்லூர் கண்மாய் கரைகளை அப்பகுதி மக்கள், மாடுகளை கட்டிப்போடும் தொழுவமாக பயன்படுத்தினர். அவ்வாறு மாடுகளை கட்டிப் போடக்கூடாது என்பதற்காகவே, வா நண்பா குழுவினர் கண்மாய் கரைகளை சுற்றிலும் பென்சிங் போட்டிருந்தனர். தற்போது பென்சிங்கை உடைத்து எரிந்துவிட்டு, கண்மாய்க் கரைகளில் அப்பகுதி மக்கள் மீண்டும் மாடுகளை கட்டிப் போட்டு வளர்க்கின்றனர்.
கண்மாயை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறையும், மாநகராட்சியும் கண்மாயை தூர்வாரி மழைநீரை சேமிக்கவும், கரைகளில் கட்டிப் போடப்படும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், நகருக்குள் இருக்கும் ஒரு முக்கிய நீர் ஆதாரமான கண்மாய் இருந்த இடமே தெரியாமல் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT