Published : 03 Jul 2014 10:00 AM
Last Updated : 03 Jul 2014 10:00 AM
‘என்னைப்போல் என் சமுதாயத்து பிள்ளைகளும் படிப்பறிவில்லாமல் இந்த கொத்தடிமைத் தொழிலுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகப் போராடுகிறேன்’ என அழுத்தமான குரலில் சொன்னார் செல்லக்கண்ணு.
தலித்துகளுக்கு துணி துவைத்தல், முடி திருத்துதல், இறுதிச் சடங்கு செய்தல் உள்ளிட்ட காரியங்களை செய்வதற்கென்றே அந்தக் காலத்தில் ஒரு சாதியை நியமித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் புதிரை வண்ணார்கள். தலித்துகளின் பிரச்சினைகள் அனைத்து தளங்களிலும் அலசப்படுகிறது. ஆனால், தலித்துகளால் தலித்துகளைவிட மோசமான சங்கடங்களை எதிர்கொள்ளும் புதிரை வண்ணார்களின் நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
புதிரை வண்ணார்களை எஸ்.சி. பட்டியலில் வைத்திருக்கிறது அரசு. ஆனால், இவர்கள் சாதிச் சான்றிதழ் வாங்குவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ‘இவர் எங்களுக்கு முடி திருத்துகிறார், துணி துவைக்கிறார்’ என்று தலித்துகள் சான்றளித்தால்தான் புதிரை வண்ணார்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கும். இதனால், பல குடும்பங்கள் தங்களது குலத் தொழிலை விடமுடியாமல் இன்னமும் கொத்தடிமைகளாகவே இருக்கின்றன.
இந்த சமூகத்தில் பிறந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த செல்லக்கண்ணு, புதிரை வண்ணார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறார். தங்களின் பிரச்சினைகள் குறித்து நம்மிடம் பேசினார் செல்லக்கண்ணு..
எட்டாவது வரைக்கும்தான் படிச்சேன். வாடிப்பட்டியில தலித்து மக்களுக்கு முடிதிருத்தும் சலூன் வைத்திருக்கிறேன். எங்கள் சலூனுக்கு மற்ற சாதிக்காரர்கள் யாரும் வரமாட்டார்கள். பிற சாதிக்காரர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் சாதி துவேசமாக நடத்தப்படுவதாகவும் தலித்துகள் ஆத்திரப்படுகிறார்கள். ஆனால், தலித்துகளுக்காக பணி செய்யும் எங்களை அவர்கள் பல வகைகளிலும் துன்புறுத்துகிறார்கள்.
பல இடங்களில், அவர்களின் வீடுகளுக்கு பணி செய்யப்போகும் எங்கள் சாதி பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். போலீஸுக்கு போனாலும் எங்கள் குரல் எடுபடுவதில்லை. தலித்துகளுக்கு வேலை செய்ய மறுத்தால் எங்களை ஊரைவிட்டு காலி செய்யவைத்து விடுவார்கள். போதாததுக்கு, அரசு அதிகாரிகளும் எங்களை இம்சிக்கிறார்கள். இந்த கொத்தடிமைத்தனம் எங்களோடு போகட்டும். வரும் சந்ததிகளாவது படித்து முன்னுக்கு வரட்டும் என நினைக்கிறோம். அதற்காக எங்கள் பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டுப் போனால் தலித்துகளை சாட்சிக்கு அழைக்கிறார்கள் அதிகாரிகள்.
நாங்கள் அந்தத் தொழிலை செய்ய வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால் அதிகாரிகளோ அந்தத் தொழிலைச் செய்தால்தான் சாதிச் சான்றிதழ் தருவோம் என்கிறார்கள். எங்கள் சாதியில் எம்.ஏ. வரை படித்தவர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருபது ஆண்டுகளாக கூலி வேலைதான் செய்கிறார்கள்.
இந்த நிலையை மாற்றி, எங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘புதிரை வண்ணார் எழுச்சிப் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். சலூனில் எனது தினசரி வருமானம் 200 ரூபாய். அதில் நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு சமுதாயப் பணிக்காக கிளம்பி விடுவேன். தென்மாவட்டங்கள் அனைத்துக்கும் சென்று எங்கள் மக்கள் மத்தியில் பேசுகிறேன்.
இதுவரை 800 குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். வாடிப்பட்டி தாலுகாவில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 240 குடும்பங்கள் உள்ளன அவர்கள் அத்தனை பேருக்கும் சாதிச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்துவிட்டேன். இந்தத் தாலுகாவில் எங்கள் பிள்ளைகள் மொத்தம் 500 பேர் படிக்கிறார்கள். இவர்களுக்காக செம்மினிப்பட்டி, ராமையன்பட்டி உள்ளிட்ட ஆறேழு கிராமங்களில் மாலை நேரக் கல்வி மையங்களை உருவாக்கி இருக்கிறேன்.
இந்த மையங்களில், படித்த பிற சாதிப் பிள்ளைகள்தான் எங்கள் பிள்ளைகளுக்கு தினமும் டியூஷன் எடுக்கிறார்கள். முதல்முறையாக கடந்த வருடம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 6 மாணவர்களை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறேன்.
நானும் எங்காவது வேலைக்குச் சேர்ந்திருந்தால் என் குடும்பம் நல்லபடியாக இருந்திருக்கும். ஆனால், என்னுடைய சமுதாயம் இன்னும் பின்தங்கிப் போய்விடும். அதனால்தான் சலூன் வேலையைப் பார்த்துக் கொண்டே சமுதாயத்துக்காக ஓடிக்கொண் டிருக்கிறேன். என்னுடைய மக்களை நிச்சயம் ஒரு நாள் முன்னுக்குக் கொண்டு வருவேன்.. நம்பிக்கையோடு சொன்னார் செல்லக்கண்ணு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT