Published : 09 Apr 2023 07:13 AM
Last Updated : 09 Apr 2023 07:13 AM

அமைச்சர்களுடன் ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தையில் உடன்பாடு - கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு

சென்னை: அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை, மத்திய அரசு அறிவிக்கும் நாளில் இருந்தே வழங்குதல், உயர் கல்விக்கான ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக தமிழக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர், அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக பேசியது, அரசு ஊழியர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ, வரும் 11-ம் தேதி தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் நேரடியாக நினைவூட்ட வாய்ப்பு அளிக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிட்டு முறையிடுவோம் என்று அறிவித்தது.

இதையடுத்து, ஜாக்டோ-ஜியோஅமைப்பினரை பேச்சுவார்த் தைக்கு வரும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற் றது.

இதில், ஜாக்டோ-ஜியோ மாநிலஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், இரா. தாஸ், கு.தியாகராஜன்உள்ளிட்டோர் பங்கேற்று, அமைச்சர்களிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர், கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, நிதியமைச்சரின் பேச்சுகளால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து விளக்கினர். பணி பாதுகாப்பு சட்டத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை முதல்வருக்குத் தெரிவிப்பதாக கூறியுள்ளோம். அவர் கட்டாயம் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்று நம்பிக்கை அளித்ததால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு செல்வோம்’’ என்றார்.

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது தமிழக முதல்வர் கொண்டுள்ள அக்கறையால், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், வரும் 11-ம் தேதி அறிவிக்கப்பட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பது என்று முடிவெடுத் துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x