Published : 09 Apr 2023 07:42 AM
Last Updated : 09 Apr 2023 07:42 AM

700 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் சிற்பம் கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

வீரபத்திரர் சிற்பம்

கிருஷ்ணகிரி: தளி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கால வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டுஉள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் தளி ஊராட்சி ஒன்றியம் கும்மளாபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அழிந்த நிலையில் காணப்பட்ட ஜங்கில் வீரபத்திரர் கோயில் இடிக்கப்பட்டு, புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை அறிந்து அங்கு ஆய்வு செய்தனர்.

அப்போது, இடித்து அகற்றப்பட்டிருந்த கற்களுக்கிடையே ஒன்றரை அடி உயரத்தில் மாக்கல்லால் செதுக்கப்பட்ட வீரபத்திரர் சிற்பம் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒய்சாளர் ஆட்சியின் அடையாளங்களாகப் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மாக்கல்லால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

சிலையில் தேய்மானம்: இந்நிலையில், முதல்முதலாக மாக்கல்லால் ஆன வீரபத்திரர் சிற்பம், கண்டறியப்பட்டு, தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பம் பல ஆண்டுகளாகப் பூமியில் புதையுண்டிருந்ததால், தேய்மானத்துடன் காணப்படுகிறது.

இச்சிற்பம் தடித்த ஆடை அணிகலன்கள், பீட அமைப்பு மற்றும் தேவி வலப்புறம் இருப்பதை ஆய்வு செய்தால், சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாளர் காலத்து கலைச் சிற்பம் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

ஆய்வு அவசியம்: வீரபத்திரர் தனது வலக்கையில் கத்தியையும், இடக்கையைப் பீடத்தின்மீது ஊன்றியுள்ள கேடயத்தின் மீதும் வைத்துள்ளார். வலது, இடது பின் கரங்களில் முறையே அம்பு, வில்லை வைத்துள்ளார்.

இவருக்கு வலப்புறம் சிறிய உருவமாக வணங்கும் நிலையில் ஆட்டுத் தலையுடன் கூடிய தட்சனின் உருவமும், இடப்புறம் வீரபத்திரரைப் போல, கைகளில் கத்தி கேடயத்தோடு நிற்கும் தேவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகத் தமிழக வீரபத்திரர் சிற்பங்களில் தேவியின் உருவம் காட்டப்படுவதில்லை. எனவே, கும்மளாபுரத்தை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x