Published : 12 Sep 2017 11:34 AM
Last Updated : 12 Sep 2017 11:34 AM

காணாமல் போனது வாடிப்பட்டி கண்மாய்: பாரம்பரிய நீர் மேலாண்மையை இழந்துவரும் மதுரை மாவட்டம்

நம் முன்னோர் பாரம்பரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தனர். அதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் பெய்யும் மழை நீரை தேக்கி பாசனம் செய்வதற்காகவே குளங்களையும், ஏரிகளையும், கண்மாய்களையும் உருவாக்கினர்.

ஒரு கண்மாய் நிரம்பினால், அதற்கு அடுத்தடுத்த கண்மாய்கள் நிரம்பும் வண்ணம், முன்னோர் திறம்பட நீர் மேலாண்மை செய்தனர். ஆனால், தற்போது மக்கள் தொகை பெருக்கம், ரியல் எஸ்டேட்டுக்காக தனியார் ஒருபுறமும், புறம்போக்கு நிலங்கள் குறைவால் அரசு நிர்வாகங்கள் மற்றொரு புறமும் போட்டி போட்டு கண்மாய்களை ஆக்கிரமித்து வருகின்றனர்.

4 ஆயிரம் கண்மாய்கள்

ஒரு காலத்தில் வைகை ஆற்றையும், கண்மாய்களையும் மையமாக கொண்டு அரசாட்சி நடந்த மதுரையில், தற்போது அந்த வைகை ஆறும், கண்மாய்களும் நம் கண் முன்பே ஆக்கிரமிக்கப்பட்டு வருவது நீர்நிலைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருந்துள்ளன. தற்போது வைகை - பெரியாறு பாசனக் கோட்டத்தின் கீழ் 148 கண்மாய்களும், மழையை நம்பி 47 கண்மாய்கள் உட்பட அங்கொன்றும், இங்கொன்றுமாக 1,301 கண்மாய்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

அரசே ஆக்கிரமித்த அவலம்

மதுரை நகருக்குள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு நிர்வாகங்களே பல்வேறு பயன்பாட்டுக்காக கண்மாய்களை அழித்து விட்டன. மீதம் இருக்கும் ஒரு சில கண்மாய்களும் அழியும் தருவாயில் இருக்கின்றன.

கிராமங்களில் இருக்கும் கண்மாய்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், மதுரை அருகே வாடிப்பட்டி அய்யர் கண்மாய். இந்தக் கண்மாய் 19 ஏக்கர், 57 சென்ட் அளவில் ஆரம்ப காலத்தில் இருந்தது. இந்தக் கண்மாய்க்கு சிறுமலையில் இருந்து தண்ணீர் வரத்து இருந்தது. 1988-ல் இந்தக் கண்மாயின் ஒரு பகுதியில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு கண்மாய்க்கு மழைக்காலத்தில் வரும் தண்ணீர் அடைப்பட்டது. அதன்பிறகு, சிறுமலை பகுதியில் பெய்யும் மழைநீர் கச்சகட்டி கண்மாய், தாதம்பட்டி கண்மாய்கள் நிரம்பி வரும் தண்ணீரே இந்த அய்யர் கண்மாயின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது.

கண்மாய்க்குள் நீதிமன்ற கட்டிடம்

காலப்போக்கில் வாடிப்பட்டி வழியாக நான்குவழிச் சாலை அமைப்பட்ட பிறகு சிறுமலை தண்ணீருக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்படி இருந்தும், சமீபத்தில் பெய்த மழைக்கு கூட இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இருந்தது. ஆனால், தற்போது இந்த கண்மாய்க்குள் நீதிமன்ற கட்டிடம் கட்டப் போவதாக கூறப்படுகிறது. அதனால், கண்மாயில் தேங்கிய மழைநீரை ஒப்பந்ததாரரே வெளியேற்றியதாக கூறப்படுகிறது. தற்போது கண்மாய் கரைகளை இயந்திரங்களை வைத்து சமப்படுத்தி வருகின்றனர். அதிருப்தி அடைந்த வாடிப்பட்டி சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் சமூக ஆர்வலர் ப.மகாராஜன் தலைமையில் கடந்த வாரம் மதுரை ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் கொ. வீரராகவராவிடம் முறையிட்டனர்.

ஆட்சியர் தெளிவான பதில் அளிக்காததால் அதிருப்தி அடைந்த மகாராஜன், இதுவரை வறட்சிக்கு 200 விவசாயிகள் தமிழகத்தில் இறந்துள்ளனர். அவர்களோடு சேர்த்து 201-வதாக நானும் சாகிறேன் என்று சொல்லி கையில் வைத்திருந்த விஷ பாட்டிலை குடிக்க முயன்றார். ஆட்சியர் அவரை சமாதானம் செய்தார். ஆனால், மகாராஜன், அய்யர் கண்மாயில் கட்டப்போகும் நீதிமன்றக் கட்டிடத்துக்கு எதிராகவே, நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு வழக்கு தொடர முடிவெடுத்துள்ளார்.

எதிர்காலத்துக்கு ஆபத்து

இதுகுறித்து மகாராஜன் கூறியதாவது: வாடிப்பட்டி தாலுகா அலுவலகம், அந்த கண்மாயில் கட்டிய அதே ஆண்டில் பெரும் மழை ஏற்பட்டு தாலுகா அலுவலகமே கண்மாய் தண்ணீரில் மூழ்கியது. அதில் தாலுகா அலுவலக ஆவணங்கள் அழிந்தன. அந்த வரலாறு வருவாய்த்துறையினர் எல்லோருக்குமே தெரியும். இந்த கண்மாயில் தண்ணீர் தேங்கிய காலத்தில், வாடிப்பட்டியில் நிலத்தடி நீர் பெருகும்.

MDU-MAHARAJAN ப. மகாராஜன்

ஆரம்ப காலத்தில் இந்த கண்மாயை நம்பி 250 ஏக்கர் விவசாய பாசனம் நடைபெற்றது. இந்த வாடிப்பட்டி அய்யர் கண்மாய் நிரம்பும்பட்சத்தில், இங்கிருந்து செல்லும் தண்ணீர் சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு சென்று அந்த தண்ணீர் அங்கிருந்து வைகை ஆற்றுக்கு சென்றது.

ஆயக்கட்டு இல்லாததால், கண்மாயில் கட்டிடம் கட்ட அனுமதித்ததாக வருவாய்த் துறையினர் சொல்கின்றனர். கண்மாய்கள் குடிநீர் ஆதாரத்திற்கும் சேர்த்துதான் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேளாண் பொறியியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீர் வரத்து இல்லை என்றும், ஆயக்கட்டு பாசனத்துக்கு வாய்ப்பே இல்லை என்றும் வருவாய்த் துறையினர் சான்று அளித்தால் மட்டுமே கண்மாயை மற்ற பயன்பாட்டுக்கு மாற்ற முடியும். அப்படி இல்லாத பட்சத்தில், நீர்நிலைகளை யாராவது ஆக்கிரமித்தால் நோட்டீஸ் வழங்காமலேயே அவற்றை அகற்றலாம். ஆனால், அரசே ஆக்கிரமிக்கும்போது என்ன செய்ய முடியும் என்றார்.

முடிந்துபோன விஷயம்..!

வாடிப்பட்டி வட்டாட்சியர் வீரபத்திரனிடம் கேட்டபோது, ‘’1985-ம் ஆண்டு வரை அந்த இடத்தில் அய்யர் கண்மாய் இருந்தது. நீர் வரத்து இல்லாததால் அந்த கண்மாய், அந்த காலத்திலேயே அரசு புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டு விட்டது. அதற்கு அப்புறம்தான் நீர்நிலைகளை மற்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால்தான்

கடந்த 1988-ல் அங்கு வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. அதன்பிறகு நான்குவழிச் சாலை, மின்சார வாரியக் கட்டிடம் போன்றவற்றுக்கு கண்மாயில் இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது வாடிப்பட்டி நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சிலர் பிரச்சினை செய்கின்றனர். எங்கள் கையில் எதுவும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x