Published : 02 Sep 2017 04:40 PM
Last Updated : 02 Sep 2017 04:40 PM
அனிதாவின் மரணம் துயரம் நிறைந்தது, அதே நேரம் அவரை தலித் பெண்ணாக அடையாளம் காட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். அவர் தமிழ் மண்ணில் பிறந்த தமிழச்சி என்றே அழைக்கப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அனிதாவின் மரணம் குறித்து ஜான் பாண்டியன் கருத்தை கேட்டபோது அவர் கூறியதாவது:
அனிதா மரணம் ஒரு துயர சம்பவம். இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. மாணவ மாணவியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் லட்சியம் எப்படி நிறைவேறும்.
ஆனால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போராடிய அனிதா, நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லையே என்று மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டது தமிழ்ச் சமுதாயத்துக்கே வெட்கக்கேடானது. வேதனைக்குரியது.
தமிழர்கள் அழிவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீடியாக்கள் தலித் என்று சொல்வதை நான் அறவே வெறுக்கிறவன். ஒரு தமிழ்ச்சாதிப்பெண், ஒரு தமிழ்க்குடிப் பெண் தமிழ்நாட்டில் பிறந்த பெண்ணை பிரித்துப்பார்க்கும் சில ஊடகங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தலித் சமுதாயப்பெண் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. அது எச்சமுதாயமாக இருந்தாலும் தமிழ்ப்பெண், தமிழ்ச்சாதிப்பெண் இறந்தது மன வருத்தத்துக்குரியது மனவேதனைக்குறியது. இனி அது போன்று நிகழக்கூடாது.
அனிதாவை தமிழச்சியாக நான் பார்க்கிறேன், தாழ்த்தப்பட்ட பெண்ணாக பார்ப்பதை நான் விரும்பவில்லை. இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தத்துக்குறிய விஷயமாக இதை பார்க்கவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT