Published : 08 Apr 2023 09:11 PM
Last Updated : 08 Apr 2023 09:11 PM

தோட்டக்கலைத் துறையின் பண்ணை, பூங்கா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக: சீமான் 

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "நீலகிரி தோட்டக் கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணிசெய்து வரும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி முன்னெடுத்து வரும் போராட்டமானது மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. மொத்தமுள்ள 800 ஊழியர்களில் 300 பேர் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மீதி 500 பேர் தற்காலிகப் பணியாளர்களாகவே தொடர்கின்றனர் என்பது வேதனைக்குரியதாகும்.

பல ஆண்டுகளுக்கு மேலாகப் பணிசெய்து வருகிறபோதிலும் அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய மறுத்து வரும் அரசின் நிர்வாகச்செயல்பாடு மிகத் தவறானதாகும். இத்தோடு, நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப்பட்டவர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படாதிருக்கிறது என்பது அப்பட்டமான உரிமைப்பறிப்பாகும். இவ்வாறு, தொழிலாளர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிரான நிர்வாக இயக்கத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்; பண்ணைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும்; தோட்டக் கலைத்துறையில் பணியாற்றும் பண்ணைப் பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகைப் பிடித்தம் செய்திட வேண்டும்; பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டுப் பணிக்காலம் முடித்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பூங்கா மற்றும் பண்ணைப் பணியாளர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவியுயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து அப்பணியாளர்கள் அறவழியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அதனை ஆய்ந்தறிந்து செய்து தர வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும்.

ஆகவே, நீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுக்கும், தொழிலாளர் உரிமைக்கும் மதிப்பளித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x