Published : 08 Apr 2023 06:13 PM
Last Updated : 08 Apr 2023 06:13 PM

“சிவகங்கை மக்களின் ஏமாற்றம் நியாயமானதுதான்” - கார்த்தி சிதம்பரம் எம்.பி வருத்தம்

சிவகங்கை: "வளர்ச்சித் திட்டங்கள் வராததால் சிவகங்கை மக்களின் ஏமாற்றம் நியாயமானதுதான்" என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி வருத்தம் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளை எழுப்பக் கூடாது என்பதற்காக ராகுல் காந்தி பதவியை தகுதி இழப்பு செய்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற தண்டனை கொடுத்தது கிடையாது. தஞ்சைப் பகுதியில் நிலக்கரி எடுக்க தமிழக அரசின் அனுமதி இன்றி அறிவித்தது தவறு. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களது அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களில் வென்று தனித்து ஆட்சி அமைக்கும். பாஜக 60 இடங்களுக்குள்தான் வெற்றி பெறும். பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது.

ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்ததற்கு மறியல் செய்வது மட்டுமே போராட்டம் கிடையாது. செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பதும் ஒரு வகை போராட்டம். மக்கள் மனதில் கொண்டு செல்வதுதான் போராட்டம். அதை தமிழகத்தில் காங்கிரஸ் செய்து கொண்டு இருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்கள் வராததால் சிவகங்கை மக்களின் ஏமாற்றம் நியாயமானதுதான். மக்களின் வேதனையும், ஏமாற்றமும் எனக்குப் புரிகிறது. சிவகங்கை மக்களவை தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சமமாக திட்டங்கள் வர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

தமிழக அரசு நிர்வாக காரணங்களால் சில முடிவுகளை எடுத்திருக்கலாம். பெண் காவலர் பயிற்சி கல்லூரி சிவகங்கையில் விரைவில் தொடங்க முதல்வரை வலியுறுத்துவேன். சிவகங்கை மாவட்டத்தில் பழங்கால வீடுகள், கோயில்கள் உள்ளன. அதனால் இங்கு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். ரயில்வே தொடர்பாக 42 கோரிக்கைகள் கொடுத்துள்ளேன். ஆனால், ஏதாவது காரணம் கூறி செய்ய மறுக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் இருந்து விலகும் ஹெச்.ராஜா சர்வதேச அரசியலில் ஈடுபடுவதற்கு வாழ்த்துகள்” என்று அவர் கூறினார். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x