Published : 08 Apr 2023 05:14 PM
Last Updated : 08 Apr 2023 05:14 PM
சென்னை: சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகை தந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தார். அங்கிருந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை - கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சாலை வழியாக மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், அங்கு உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவேகானந்தரின் முழு உருவச் சிலையை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். முன்னதாக, விவேகானந்தர் இல்லத்திற்கு சென்றவுடன், அங்கு வைக்கப்பட்டு இருந்த விவேகானந்தர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணாமலை ஆப்சென்ட்: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் காரணமாகவே சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள நிகழ்வுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. | விரிவாக வாசிக்க > பிரதமர் மோடியின் சென்னை நிகழ்வுகளில் அண்ணாமலை பங்கேற்காதது ஏன்?
பிரதமருக்கு புத்தகம் பரிசு: முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்றார். 'Gandhi's Travel in TamilNadu' என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் வழங்கி வரவேற்றார்.
மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர்: சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த பிரதமர் மோடி மக்களைப் பார்த்து கையசைத்தார். விமான நிலையப் பகுதிகளில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி காரில் இருந்தபடி பார்வையிட்டார்.
புகைப்படக் காட்சியை பார்வையிட்டார்: புதிய விமான நிலைய முனையத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், புதிய முனையத்தில் இருக்கின்ற பல்வேறு வசதிகளையும் பிரதமர் பார்வையிட்டார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பிரதமருக்கு விளக்கினார்.
முதல்வருடன் கைக்குலுக்கி பாராட்டு: சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, புதிய முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். அப்போது, உடன் இருந்த முதல்வர் ஸ்டாலினுடன் கைக்குலுக்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். | பார்க்க > எப்படி இருக்கிறது சென்னை விமான நிலைய புதிய முனையம்? - புகைப்படத் தொகுப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT