Published : 08 Apr 2023 04:05 PM
Last Updated : 08 Apr 2023 04:05 PM
சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின், ‘காந்தி ட்ராவல் இன் தமிழ்நாடு’ (Gandhi Travel in TamilNadu) என்ற புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். அது, காந்தியின் தமிழக வருகை குறித்த புத்தகம் ஆகும்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகை தந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமருக்கு புத்தகம் பரிசு: சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்றார். 'Gandhi's Travel in TamilNadu' என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் வழங்கி வரவேற்றார்.
மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர்: சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த பிரதமர் மோடி மக்களைப் பார்த்து கையசைத்தார். விமான நிலையப் பகுதிகளில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி காரில் இருந்தபடி பார்வையிட்டார்.
புகைப்படக் காட்சியை பார்வையிட்டார்: புதிய விமான நிலைய முனையத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், புதிய முனையத்தில் இருக்கின்ற பல்வேறு வசதிகளையும் பிரதமர் பார்வையிட்டார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பிரதமருக்கு விளக்கினார்.
முதல்வருடன் கைக்குலுக்கி பாராட்டு: சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, புதிய முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். அப்போது, உடன் இருந்த முதல்வர் ஸ்டாலினுடன் கைக்குலுக்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT