Published : 08 Apr 2023 07:00 AM
Last Updated : 08 Apr 2023 07:00 AM
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 10,117 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். சுமார் 8 மாதங்களுக்கு பின் குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி மார்ச் 24-ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் விவரம் நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில், குரூப் 4 சுருக்கெழுத்து தட்டச்சர் பிரிவுக்கான தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போட்டித் தேர்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘குரூப்-4 சுருக்கெழுத்து தட்டச்சர் பிரிவில் 1,186 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான டிஎன்பிஎஸ்சி முடிவுகளை ஆராய்ந்தபோது தென்காசி மாவட்டத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிவந்தது.
குறிப்பாக, சங்கரன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்தும் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். ஒரே பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. தேர்ச்சி பெற்ற அனைவரும் தென்காசியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி உரிய விசாரணை நடத்த வேண்டும்’’என்றனர்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''குறிப்பிட்ட ஒரு பகுதியில் அதிக மானவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்ற காரணத்துக்காக, தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறுவது முறையல்ல. ஏதேனும் குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களுடன் grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு புகார் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். ஏற்கெனவே நில அளவர் தேர்வில் காரைக்குடி அருகே 700 பேர் ஒரே மையத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற விவகாரமும் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 4 Comments )
இந்த குரூப் 4 தேர்வு வெளிவந்தபின் பல்வேறு புகார்கள் ஊடகங்களில் வந்தது. துறை அமைச்சரும் கூட சட்டசபையில் இது பற்றி அறிக்கை கேட்டிருப்பதாக தெரிவித்தார். பல பத்திரிகைகளில் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்பி, கண்டித்தன. இப்போது தேர்வாணர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், எழுப்பப்பட்ட புகார்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? தவறுகளோ முறைகேடுகளோ நடைபெறவேயில்லையா? இதுபற்றி நடவடிக்கை ஏதும் எடுக்காமல், புகார்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வர்கள் பரிசீலனை செய்வது தமிழகத்தில் வேலை வாய்ப்பு வேண்டி காத்திருப்பவர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏமாற்றத்தையும், அவநம்பிக்கையையுமே அளிக்கும்.
0
0
Reply
திராவிட மாடல் ஆட்சியில் பணிக்குழு தேர்தலை கூட முறையாக நடத்த இயலவில்லை.
0
0
Reply