Published : 08 Apr 2023 06:06 AM
Last Updated : 08 Apr 2023 06:06 AM
சென்னை: திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. மேலும், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக இன்று மாயையில் சிக்கி இருக்கிறது. பொதுக்குழு சரியில்லை என்று நீதிமன்றம் சென்றோம். உயர் நீதிமன்ற அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் படைத்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து இல்லை என்றோம். அதுகுறித்து நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்றனர். பின்னர், பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்களை நீக்கி இருக்கிறார்கள், இடைக்காலப் பொதுச் செயலாளரை அமர்த்தி இருக்கிறார்களே என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டோம். பொதுக்குழுவே செல்லும் என்று சொன்ன பிறகு, தீர்மானங்கள் செல்லாமல் போய்விடுமா என்று நீதிமன்றம் கேட்கிறது.
தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் அரசியல் உயில் எழுதிவிட்டார். அது என்ன ஆயிற்று? நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று சொன்னார்களே? புதிய பொதுச்செயலாளர் தேவைப்பட்டது ஏன்? இது இயற்கை நீதிக்கு முரணானது அல்லவா? இதற்கெல்லாம் தற்போது பதில்இல்லை.
அதனால் நாங்கள் தொடுத்த வழக்குகள் நீதிமன்றங்களில் கால்பந்தாட்ட பந்துபோல அலைக்கழிக்கப்படுகிறதே தவிர, தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இந்த மாயை, மக்கள் மன்றத்துக்குச் சென்றால் விலகும். எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்ல வரும் 24-ம் தேதி திருச்சியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் அதிமுக 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழா என முப்பெரும் விழா நடத்த இருக்கிறோம். எங்களுடைய முறையீடு இனி மக்களிடம்தான்.
அதன்பிறகு, பன்னீர்செல்வம் மாவட்டந்தோறும் சென்று மக்களைச் சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: பழனிசாமி எந்தக் கூட்டத்தைக் கூட்டினாலும், அது சட்ட விரோதமானது. பிரதமரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால், நான் நிச்சயம் சந்திப்பேன். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம்.
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் போட்டியிடுவோம். அதிமுக விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் தேர்தல் ஆணைய தாக்கீதை இன்னும் ஒப்படைக்கவில்லை. அதை ஒப்படைக்கும்போது, அதிமுக பொறுப்பாளர் யார் என்பது தெரியவரும்.
சர்வாதிகார, பணபலம் மிக்கவர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் விதிகளைத் திருத்தினர். அகம்பாவத்தோடு இயக்கத்தை நடத்தினால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போல படுதோல்வி அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT