Published : 08 Apr 2023 05:50 AM
Last Updated : 08 Apr 2023 05:50 AM
சென்னை: சென்னை - கோவை இடையே இன்று தொடங்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையிலிருந்து கோவைக்கு ஏசி சேர் காரில் பயணம் செய்ய ரூ.1,365-ம், எக்சிகியூட் டிவ் சேர் காரில் பயணம் செய்ய ரூ.2,485-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய வழித் தடங்களில் வந்தே பாரத் என்ற அதிநவீன அதிவிரைவு சொகுசு ரயில் இயக்கப்பட்டு வரப்படுகிறது. தமிழகத்தில் சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், சென்னை-கோவை இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் (இன்று) தொடங்கி வைக்கிறார். வழக்கமான ரயில் சேவை நாளை (9-ம் தேதி) முதல் தொடங்குகிறது.
கோவையிலிருந்து இந்த ரயில் (வண்டி எண்.20644) காலை 6 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (20643) சென்னையிலிருந்து மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும்.
பயண நேரம் குறையும் 130 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரயில்களை ஒப்பிடுகையில் இந்த ரயிலின் பயண நேரம் ஒரு மணி நேரம் 20 நிமிடம் குறைவாகும். இதற்கிடையே, சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டண விவரம் வெளியாகி உள்ளது.
இதன்படி, சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல ஏசி சேர் காரில் பயணம் செய்ய ரூ.1,365-ம், எக்சிகியூட்டிவ் சேர் காரில் பயணம் செய்ய ரூ.2,485-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலில் சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏசி சேர் காருக்கு ரூ.895-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.1,740-ம், ஈரோடு செல்ல ஏசி சேர் காருக்கு ரூ.985-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.1,930-ம், திருப்பூருக்கு ஏசி சேர் காருக்கு ரூ.1,280-ம், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.2,325-ம், கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளன்றே இந்த ரயிலில் சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல ஏசி சேர் காரில் வெயிட்டிங் லிஸ்ட் 19-ம், எக்சிகியூட்டிவ் சேர் காரில் வெயிட்டிங் லிஸ்ட் 3 ஆகவும் உள்ளது. உணவும் வழங்கப்படும் கோவையிலிருந்து சென்னைக்கு வர முதல் நாளான்று ஏசி சேர் காரில் வெயிட்டிங் லிஸ்ட் 17 ஆகவும், எக்சிகியூட்டிவ் சேர்காரில் வெயிட்டிங் லிஸ்ட் 6 ஆகவும் உள்ளது.
மேலும், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உணவு கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. உணவு தேவையில்லை எனில் அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தக் கட்டண விவரங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், ரயில்வே தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT