Published : 08 Apr 2023 05:43 AM
Last Updated : 08 Apr 2023 05:43 AM
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வருவதையொட்டி சென்னை சென்ட்ரல், மெரினா கடற்கரை உள்ளிட்ட சில இடங்களில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்டரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாகச் செல்ல வாய்ப்புள்ளது.
பிரதமர் விவேகானந்தர் இல்லம் வரும்போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணா சாலைக்கு வலதுபுறம் திரும்பலாம். போர் நினைவிடத்திலிருந்து வெளிச்செல்லும் வானங்கள் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணா சாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பிவிடப்படும்.
மாலை 4 முதல் மாலை 6 மணி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும். மேலும் வணிக வாகனங்கள் மதியம் 2 முதல் மாலை 8 மணி வரை இடையிடையே திசை மாற்றம் செயல்படுத்தப்படும். அதன் விபரம்: அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமிமுனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி சாலை வழியாகத் திருப்பிவிடப்படும். வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் என்ஆர்டி புதிய பாலத்திலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாகத் திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையிலிருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். லேங்கஸ் கார்டன் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலத்துக்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பிபாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். கிரீன்வேஸ் சாலையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பி விடப்படும்.
அதிக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உழைப்பாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
செங்கை-தாம்பரம் சாலையில்.. சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தையும் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். இதனால், தாம்பரம் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் தேவையிருப்பின் கீழ்க்கண்டவாறு வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பல்லாவரத்திலிருந்து, சென்னை விமான நிலையம், கிண்டிமார்க்கமாகச் செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படும். ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநீர்மலை மேம்பாலம் வழியாக மற்றும் 200அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்லலாம்.
மேலும், ஜிஎஸ்டி சாலை பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்குச் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT