Published : 08 Apr 2023 07:25 AM
Last Updated : 08 Apr 2023 07:25 AM

ஜார்க்கண்ட் மாநில கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபடுவேன் - ஆளுநர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பாலகுருசாமி உறுதி

கோவை: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அனைவருடனும் இணைந்து பாடுபடுவேன் என்று, அம்மாநில ஆளுநரின் கெளரவ கல்வி ஆலோசகராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநரின் கெளரவ கல்வி ஆலோசகராக, கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜார்க்கண்ட் மாநில ஆளுநரின் முதன்மைச் செயலர் நிதின் மதன் குல்கர்னி வெளியிட்டுள்ளார்.

ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, மாநிலத்தின் உயர் கல்வியை மேம்படுத்துதல், பல்கலைக்கழக செயல்பாடுகள், பாடத் திட்டங்களை மேம்படுத்துதல், உயர்கல்வியில் நிலவும் பிரச்சினைகளைக் களைவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது ஆலோசகரின் முக்கியப் பணிகளாகும்.

இதுகுறித்து இ.பாலகுருசாமி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கல்வியில் பின் தங்கிக் காணப்படும் மாநிலத்தில் பணியாற்றி, அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்தவும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தவும், கல்வியில் புதுமையைப் புகுத்தவும் என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்.

எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தப் பாடுபடுவேன். என் திறமையை உணர்ந்தே, இந்தப் பொறுப்பை அளித்துள்ளதாகக் கருதுகிறேன். முதலில் அங்குள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த மாநில
கல்வி நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான், எங்கு இடர்பாடு உள்ளது, அதை மேம்படுத்த வேண்டும் என்பது தெரியும். மேலும், கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்தும் வகையில், பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதற்காக, அங்குள்ள கல்வியாளர்கள் அனைவருடனும் ஒருங்
கிணைந்து, கூட்டு முயற்சியின் அடிப்படையில் கல்வித் துறையை மேம்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

2002 முதல் 2005 வரை அண்ணா பல்கலை. துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த பாலகுருசாமி, 2006 முதல் 2010 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்துள்ளார். 2011 முதல் 2 ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். முன்னதாக, பஞ்சாப், ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், பாடத் திட்டங்களை மாற்றுவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x