Last Updated : 08 Apr, 2023 05:18 AM

1  

Published : 08 Apr 2023 05:18 AM
Last Updated : 08 Apr 2023 05:18 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு

கிரண் எஸ் ஜாவலி

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலை, செருப்பு, மின்சாதனப் பொருட்கள் போன்றவை அழியக் கூடியவை. தங்கம், வெள்ளி, வைரம் போன்றவை எளிதில் அழியாதவை. எனவே அரசு கருவூலத்தில் அழியக்கூடிய நிலையில் உள்ள சேலை, செருப்பு உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் கர்நாடக அரசு நேற்று முன்தினம், பெங்களூருவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலி 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: எந்தெந்த பொருட்களை ஏலம் விடுவது? ஏலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? மதிப்பீட்டாளரை யார் நியமனம் செய்வது? உள்ளிட்ட அடிப்படையான சந்தேகங்களை முதலில் களைய வேண்டும். அதன்பிறகே ஏலநடவடிக்கை தொடங்கும்'' என்றார்.

கருவூலத்தில் இருக்கும் பொருட்கள்: 11,344 புடவைகள், 750 செருப்புகள், 44 குளிர்சாதன பெட்டிகள், 33 தொலைபேசிகள் மற்றும் இன்டர்காம்கள், 131 உடை வைக்கும் பெட்டிகள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 65 மேசைகள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோஃபா செட்டுகள், 31 டேபிள் கண்ணாடிகள், 250 சால்வைகள், ஒரு வீடியோ கேமரா, நான்கு சிடி பிளேயர்கள்.தங்கம் மற்றும் வைரத்தில் வளையல்கள், காப்புகள், காதணிகள், நெக்லஸ், மூக்குத்தி, வாள், மயில், தங்கத்திலான மனித சிற்பம், தங்கத் தாள், தங்கத் தட்டு, தங்கக் காசுமாலை, ஒட்டியாணம், தங்கத்தில் ஆன கடவுள் சிலைகள், தங்க மாம்பழம், தங்க கைக்கடிகாரங்கள், தங்கச் சங்கிலி ஆகியவை உள்ளன. மாணிக்கம், மரகதம், முத்து, நீலப்பச்சை நிறத்திலான ரத்தினக் கல் 700 கிலோ வெள்ளி பொருட்களும் உள்ளன. ரொக்கமாக ரூ.1.66 லட்சம் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x