Published : 08 Apr 2023 04:56 AM
Last Updated : 08 Apr 2023 04:56 AM
சென்னை: தமிழகத்துக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உரியதாகவும், மர்மமானதாகவும் இருக்கின்றன. அவரது நடவடிக்கைகளை கண்டித்து வரும் 12-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்முத்தரசன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உரியதாகவும், மர்மமானதாகவும் இருக்கின்றன. சட்டத்தை மீறிய செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ளத் துடிக்கிறார். மாநிலங்களில் மரபு சார்ந்த அதிகாரப் பதவியில் இருக்கும் ஆளுநர், அமைச்சரவையின் முடிவுகளை செயல்படுத்துபவர்.
சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குபவர். ஒப்புதல் வழங்க மறுத்து, மீண்டும் அதை பேரவைக்கு அனுப்ப அவருக்கு அதிகாரம்
உண்டு. மீண்டும் அந்த சட்டத்தை சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். இப்படித்தான் அரசியலமைப்பு சட்டமும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் சொல்கின்றன. ஆனால், இவற்றை மீறி ஆளுநர் செயல்படுகிறார்.
பேரவையை அவமதிக்கும் செயல் மாநில அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையே சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டும். ஆனால், அதில் பல பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் வாசித்தது, சட்டப்பேரவையை அவமதிக்கும் செயலாக அமைந்தது. பொது வெளியிலும் கடும் விமர்சனத்துக்கு ஆளுநர் உள்ளானார். மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு ஆளுநர் இன்னும் அனுமதி தரவில்லை. குறிப்பாக, 42 உயிர்களை பலிவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்துக்கு இன்னும் அனுமதி தரவில்லை.
‘ஏன் இதுபோன்ற கோப்புகளை முடக்கி வைத்துள்ளீர்கள்?' என்று கேட்டபோது, அரசுக்கு பதில் அளிக்கவில்லை. மாறாக, மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில்,
‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்' என்று பேசி இருக்கிறார். தனது பிரமாண உறுதிமொழியை மீறி அவர் இப்படி பேசியிருப்பது, அவரது பொறுப்பற்ற செயலை காட்டுகிறது. சாதாரண ரவியாக இருந்தால், இதுபோன்ற அபத்தங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆளுநராக இருப்பதால்தான் கண்டிக்கிறோம்.
மக்களை கொச்சைப்படுத்துவதா?: கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டங்கள் அந்நிய நாடுகளின் நிதியால் நடந்த போராட்டம் என்பது, மக்களை கொச்சைப்படுத்துவது ஆகும்.
தூத்துக்குடியில் அதிமுக ஆட்சியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஆளுநர் நியாயப்படுத்துகிறாரா? ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் தனக்கு கவலை இல்லை என்று கூறும் ஆளுநர், இனி எங்களுக்கு தேவையில்லை என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடாகும்.
ஆளுநர் பதவியே எந்த மாநிலத்துக்கும் அவசியம் இல்லாத பதவியாகும். பாஜகவை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சை கருத்துகளை கூறி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் ஏப்.12-ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT