Published : 08 Sep 2017 07:49 PM
Last Updated : 08 Sep 2017 07:49 PM
மக்கள் அங்கீகரித்திருக்காவிட்டால் எனக்கு இப்படமே இறுதிச்சுற்றாயிருக்கும். அடுத்த திரைப்படம் தொடர்பாக தற்போது எழுதி வருகிறேன் என்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்தார்.
புதுவையில் இந்திய திரைப்படவிழா வரும் இன்று தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகியுள்ள 'இறுதிச் சுற்று' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை இயக்குநர் சுதா கொங்கராவிடம் முதல்வர் நாராயணசாமி வழங்கினார்..
புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, மத்திய அரசு திரைப்பட விழா இயக்குநரகம், நவதர்சன் திரைப்படக் கழகம் சார்பில் இந்திய திரைப்பட விழா-2017 ஐந்து நாட்களுக்கு புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "நல்ல திரைப்படங்களை ரசியுங்கள். ஆனால் சினிமா மோகம் இங்குள்ளது. 'விவேகம்' திரைப்படம் வெளியானபோது எனக்கு ஒருவர் போன் செய்தார். விவேகம் படத்துக்கு உங்களுக்கு 500 டிக்கெட் வந்துள்ளதாமே எனக்கு இரண்டு டிக்கெட் தாருங்கள் என்றார். நான் அவரிடம் நான் சினிமா பார்ப்பது இல்லை. தவறான தகவல் என்றேன். அத்துடன் திரைப்பட நடிகர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் பழக்கமும் இங்குதான் உள்ளது. நல்ல படத்தை ரசியுங்கள். அப்படங்களை கவுரவிப்போம்" என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், "பல விருதுகள் இப்படங்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால், முதல் முறையாக புதுச்சேரி அரசிடமிருந்து கிடைத்த விருது எனக்கு கவுரவம். இத்திரைப்படத்துக்கு மக்கள் அங்கீகாரம் கிடைத்திருக்காவிட்டால் எனக்கு இப்படமே இறுதிச்சுற்றாக இருந்திருக்கும். படங்கள் விருது கிடைப்பெல்லாம் நல்லதுதான். படம் சம்பாதித்துத் தந்ததா என்று பெண் இயக்குநரான என்னிடம் பலரும் இக்கேள்வியை முன்வைக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கில் பிளாக்பஸ்டர் படம்" என்று குறிப்பிட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த படம் தொடர்பாக எழுதி வருகிறேன். முழுமையாக தெரிவிக்க இயலாது. நிஜ சம்பவமாக இருக்கும். முதன் முதலாக விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் புதுச்சேரி அரசு தந்துள்ளது. இந்த காலத்தில் தயாரிப்பாளரிடமிருந்து பணம் பெறுவதே கடினம். அரசே விருதும், நிதியும் தந்துள்ளதால் இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்" என்றார் மகிழ்ச்சியுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT