Published : 07 Apr 2023 07:12 PM
Last Updated : 07 Apr 2023 07:12 PM
மதுரை: வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குப்படுத்தவும், வரைமுறைப்படுத்தவும் தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அரசு பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக தமிழக அரசு 23.7.2014-ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: தமிகத்தில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப்படுத்தவும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப்படுத்தவும் மாநில அளவில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
நீரின்றி அமையாது உலகு. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குப்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த சட்டம் நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப்படுத்தவும் சட்டம் நிறைவேற்ற உயர்மட்டக்குழு மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்கள் அரசிடம்13.01.2020-ல் அறிக்கை சமர்பித்துள்ளது. ஆனால் இதுவரை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே உயர்மட்டக்குழு, தொழில்நுட்பக் குழு சமர்பித்த அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு விரைவில் நிலத்தடி நீரை பாதுகாக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
இந்தச் சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும், புதிய சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக 24.09.2020-ல் மத்திய அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்ற வேண்டும். விசாரணை ஏப். 25-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT