Published : 07 Apr 2023 06:51 PM
Last Updated : 07 Apr 2023 06:51 PM
மதுரை: அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பணியிட மாற்ற உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த தனசேகரபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் நிலை தனி அலுவலராக 2005-ல் நியமிக்கப்பட்டேன். பல்கலைக்கழக நிதிப் பிரச்சனையை கருத்தில் கொண்டு 2018-ல் 647 அலுவலர்களுக்கு பதவி குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு வழங்கி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து தடையாணை பெற்றனர். நான் உதவி பிரிவு அலுவலராக பதவி இறக்கம் செய்யப்பட்டேன். அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் நான் உட்பட 12 தனி அலுவலர்கள் விவசாயத்துறை அலுவல் பிரிவுக்கு மாற்றப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். உயர் நீதிமன்றம் எங்கள் பணிக்குறைப்புக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இதனால் மாற்றுவழியில் பணி இடமாற்றம் என்ற பெயரில் எங்களுக்கு பதவி குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பணி இட மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், மனு குறித்து உயர் கல்வித்துறை செலயாளர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT