Last Updated : 07 Apr, 2023 05:39 PM

1  

Published : 07 Apr 2023 05:39 PM
Last Updated : 07 Apr 2023 05:39 PM

ஸ்டெர்லைட் பற்றி ஆளுநர் ரவி பேசியது வேதனை அளிக்கிறது: அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி: “மக்களுடைய உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. உயர்ந்த பதவியில் உள்ள ஒரு தலைவர் அதைப்பற்றி பேசுவது வேதனை அளிக்கிறது” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் இன்று தண்ணீர் பந்தலை, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கிய அவர் கூறியதாவது: ''அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எங்கு சென்றாலும் தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தற்போது அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. அதன்படி மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களிடம் விண்ணப்பப் படிவங்களை வழங்குவர். அதன் பின்னர் பழைய உறுப்பினர்களுடன், புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, படங்களுடன் இபிஎஸ் படமும் அடங்கிய புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கைகான படிவங்களை நிர்வாகிகளிடம் துணைப்பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வழங்கினார்.

வேதனை அளிக்கிறது: ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கவர்னர் ரவி பேசும்போது வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று ஆலையை மூட சதி நடந்ததாக கூறியுள்ளார். மக்களுடைய உணர்வுகள் அடிப்படையில் கடந்த கால அரசுகள் அந்த முடிவுகளை எடுத்தது. உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இப்படி பேசுவது அழகல்ல. மக்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றனர். முடிந்து போன நிகழ்வைப் பற்றி பேசுவது வேதனை அளிக்கிறது.

கருத்து கூற விரும்பவில்லை: நாட்டின் வளர்ச்சியை தடுக்க வெளிநாடுகளில் இருந்து எப்படிப்பட்ட சதி வந்தாலும் அதை நாட்டின் பிரதமர் மோடி முறியடிப்பார். அவர், தன் கடின உழைப்பாலும், மக்களை காக்கும் நடவடிக்கைகளாலும் உலகத் தலைவராக உயர்ந்து வருகிறார். இந்தியாவை தலைநிமிர செய்து வருகிறார். அந்நிய நாட்டில் இருந்து பணம் வருவதை அவர் தடுப்பார். அதுபோன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட்டாலும் அவர்களையும் கைது செய்வார்.

இதேபோல தமிழக அரசு இயந்திரம், அதிகாரிகளும் இந்த விஷயத்தை சிறப்பாக கையாளுவார்கள். மசோதாக்கள் குறித்து கவர்னர் பேசியது அவருடைய கருத்து. அதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. அதிமுக இபிஎஸ் தலைமையில் மட்டுமே செயல்படுகிறது. அவரின் கீழ் ஒன்றரை கோடி தொண்டர்களும் இயங்குகின்றனர். கட்சியை விட்டு வெகு தூரம் சென்றவர்களை குறித்து, பேசுவதையோ கருத்து கூறிவோ விரும்பவில்லை” என்று அவர் கூறினார். இந்நிகழ்வின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x