Last Updated : 07 Apr, 2023 10:49 AM

 

Published : 07 Apr 2023 10:49 AM
Last Updated : 07 Apr 2023 10:49 AM

பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: புதுச்சேரி ஆட்சியர் வல்லவன்

புதுச்சேரி: பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: "புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக கரோனா பரவல் இல்லை. கடந்த சில வாரங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கரோனா ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் பலி ஆனார். புதுச்சேரியில் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் நோய் தொற்று இருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமுள்ளது. எனவே புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தை, பூங்கா, திரையரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும்.

பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் அறைகள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சானிடைசர் வைக்கப்பட வேண்டும். முக்கியமாக கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். தேர்வில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனா முந்தைய காலத்தில் அறிவுறுத்திய நடைமுறைகள் தற்போதும் பொருந்தும்.

புதுச்சேரியில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி முகக்கவசம் பொதுமக்கள் அணிய வேண்டும். அப்படி அணியாவிட்டால் அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும். புதுச்சேரியி்ல் 36 பேரும், காரைக்காலில் 34 பேரும், ஏனாமில் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஹேயில் யாருக்கும் பாதிப்பில்லை" என ஆட்சியர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x