Published : 07 Apr 2023 04:42 AM
Last Updated : 07 Apr 2023 04:42 AM
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப். 8) சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்.8) மாலை 3 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்துவைக்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
பின்னர், மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையில் அவர் செல்லும் வழித் தடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் சோதனை மேற்கொள்ளும் போலீஸார், சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என்று கண்காணித்து வருகின்றனர்.
மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகை பாதுகாப்புப் பணிகளில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வரும் 8-ம் தேதி சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு: பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள 10, 11-வது நடைமேடைகளைப் பார்வையிட்ட அவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தை முழுமையாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருவது, ரயில் நிலைய நுழைவுவாயில்களில் பரிசோதனைகளை அதிகரிப்பது, கண்காணிப்புப் பணி தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
ஆய்வின்போது, ரயில்வே காவல் கூடுதல் டிஜிபி வனிதா, தெற்கு ரயில்வே ஐ.ஜி. ஈஸ்வர ராவ், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT