Published : 11 Sep 2017 04:02 PM
Last Updated : 11 Sep 2017 04:02 PM

கட்டாஞ்சிமலையில் குவியும் பட்டாம்பூச்சிகள்: மகிழ்ச்சியில் இயற்கை விரும்பிகள்

தட்பவெப்பநிலை மாறுபாடு காரணமாக சென்ற ஆண்டு பறக்க மறந்த பட்டாம்பூச்சிகள், தற்போது பெய்திருக்கும் மழையால் குவியத் தொடங்கியுள்ளன. இந்த அரிய காட்சி தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் ஒன்றான கட்டாஞ்சி மலையில் காண முடிகிறது.

இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு முக்கியமானது. மலைக்காடுகளிலும், அடர்ந்த வனங்களிலும் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்களின் பரவலுக்கு இந்த பட்டாம்பூச்சியின் மகரந்த சேர்க்கையே முக்கியக் காரணி. இந்த பட்டாம்பூச்சிகள், தன் உடலில் உள்ள கண்ணைக் கவரும் பல வண்ணக் கலவையால் வண்ணத்துப்பூச்சிகள் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

நிலத்தில் வாழும் மிகப்பெரும் உயிரின குடும்பமான காட்டு யானைகளின் கூட்டங்களைப்போல ஆண்டுக்கு இருமுறை பருவ சூழலுக்கு ஏற்றார் போல் இடப்பெயர்ச்சி செய்யும் இயல்புடையது பட்டாம்பூச்சிகள். மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையின் தொடக்க காலத்தில் மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பறக்கத் துவங்கும். அப்படியே அவை கிழக்கு தொடர்ச்சி மலைக்காடுகளை சென்றடையும். இனவிருத்திக்கு பின்னர் அங்கிருந்து வடகிழக்கு பருவமழையின் துவக்க காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்குதொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இந்த இடப்பெயர்ச்சி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஒரு இயற்கை சார்ந்த நிகழ்வு என்பது இயற்கை விஞ்ஞானிகளின் கூற்று.

கடந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதம் முதல் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி நவம்பரில் லட்சக்கணக்கான பலவண்ண வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான மாங்கரை, ஆனைகட்டி, கோபனாரி, வெள்ளியங்காடு, முள்ளி, பில்லூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகைக் காடுகளை கடந்திருக்க வேண்டும். ஆனால் மழை பொய்த்தது, கடும் வறட்சியினால் ஏற்பட்ட இயற்கை மாற்றமாக பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி தொடங்கவில்லை. இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் பட்டாம்பூச்சிகளை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைக்காடுகளில் அவற்றைக் காணாது கவலையுற்றனர். இதனால் ஏற்படும் சூழலியல் மாற்றம் இயற்கைக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யாததால் எங்கே இம்முறையும் பட்டாம்பூச்சிகளின் வலசை காணாமலே போய்விடுமோ என்ற எண்ணப்போக்கு சூழலியலாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பெய்யும் மழை அந்த இருள்மையை போக்கி விட்டது. மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மழைப் பொழிவு நன்றாக இருப்பதால் செடி,கொடிகள் பூக்க ஆரம்பித்து விட்டன. அதில் தேனுறிஞ்சும் பட்டாம்பூச்சிகளும் நிறைய வர ஆரம்பித்துவிட்டன. மாங்கரை தொடங்கி வெள்ளியங்காடு, தாயனூர் அருகே அமைந்துள்ள கட்டாஞ்சி மலைகளில் எல்லாம் திரும்பின பக்கமெல்லாம் விதவிதமான பட்டாம் பூச்சிகளைக் காண முடிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இயற்கை ஆர்வலர் சுப்பிரமணியம், ''கடந்த சில நாட்களாகத்தான் இந்த காடுகளில் இவ்வளவு பட்டாம்பூச்சிகளை காணமுடிகிறது. இது ஆரம்பம்தான். இப்போது சில ஆயிரங்களாக ஆங்காங்கே தென்படும் பட்டாம்பூச்சிகள் இன்னமும் சில நாட்களில் லட்சக்கணக்காக மாறும். பிறகு அதுவே காடுகள் பூராவும் காணப்படும் அந்த அரிய காட்சியை காண நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்!'' என தெரிவித்தார்.

கட்டாஞ்சி மலையில் பூத்துக் குலுங்கும் செடிகளும், அவற்றில் காணப்படும் பட்டாம்பூச்சிகளும்...

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x