Published : 01 Sep 2017 08:24 AM
Last Updated : 01 Sep 2017 08:24 AM
கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கடுமையான மனச் சிதைவு பாதிப்பில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. எனது இந்த நிலைக்கு சமூகமே காரணம் என்று ‘தி இந்து’விடம் அவர் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் அருகே மேன்சன் ஒன்றில் தங்கி செயல்பட்டு வருகிறார் டிராஃபிக் ராமசாமி. அவருடன் அவரது மாணவியான ஃபாத்திமா மற்றும் வழக்கறிஞர் இருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களில் ஐந்து முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராமசாமி. இதைத் தொடர்ந்து நேற்று காலை ‘தி இந்து’ வுக்காக ராமசாமியை சந்தித்தோம்.
நாம் சென்றபோது அவரது அறையில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. சரியாக சாப்பிடாததாலும் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாலும் உடல் சோர்ந்து மன பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். அவ்வப்போது கோபம் தீராதவராக கட்டிலில் இருந்து எழ முயற்சித்து முடியாமல் கீழே உருண்டு விழுகிறார்.
“யாருக்கும் சமூகத்து மேல அக்கறை இல்லை. தமிழ்நாடே குட்டிச்சுவரா போயிடுச்சு... ஊழலை தடுக்க முடியலை” என்று கோபத்தில் கத்தியவர், பின்னர் நம்மிடம் பேசினார்.
“கிண்டி கத்திப்பாராவில் இருந்து வண்டலூர் வரைக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக லட்சக்கணக்கான பேனர்களை சட்டவிரோதமாக வெச்சிருக்காங்க. இதை எல்லாம் நாங்க வீடியோவாக எடுத்திருக்கோம். பேனர்களை அகற்றச் சொல்லி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கடந்த செவ்வாய்க்கிழமை கிண்டிக்கு போனேன்.
அங்கிருந்த போக்குவரத்து காவலர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தப்ப மவுண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் வந்தார். அவர் என்னிடம், ‘எல்லா பேனரும் முறைப்படி அனுமதி வாங்கிதான் வைக்கப்பட்டிருக்கு’ என்று சொன்னார். அனுமதியை காட்டுங்கன்னு கேட்டேன். உடனே அவர் சட்டையைப் பிடிச்சி கன்னத்தில் ஓங்கி அறைஞ்சுட்டார். உதடு கிழிஞ்சு ரத்தம் வருது. என்னைப் பாருங்க.. இவ்வளவு ஒடிசலா இருக்கிற என்னைப் பார்த்து ஒருத்தனுக்கு அடிக்க தோணுதுன்னா எப்படிப்பட்ட உலகத்துல நான் வாழறேன். என்னை அடிச்சப்ப ரோட்டுல போற அத்தனை பேருமே வேடிக்கைதான் பார்த்தாங்க. ஒருத்தர் வந்து கேட்கலையே. என் போராட்டம் ஒண்ணும் வெற்றி அடையலை. அதான், இனிமே வாழ்ந்து என்ன பிரயோஜனம்... செத்திடலாம்னு தோணுச்சு. நான் மீண்டும் தற்கொலை முயற்சியில் இறங்கி இறந்து போனால், அதற்கு இந்த சமூகத்தில் வாய் மூடி மவுனமாக இருக்கும் நீங்கள் ஒவ்வொருவருமே காரணம்” என்றவர் ஒருகட்டத்தில் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
ராமசாமியை கவனித்துக் கொள்ளும் பாத்திமா கூறும்போது, “மூணு நாளாகவே அவரு ஒரு நிலையில இல்லை. தனியா பேசுறாரு. கத்தறாரு. கிடைக்கிறப் பொருளை எல்லாம் தூக்கி அடிக்கிறாரு. ஃபேனில் துண்டைக் கட்டி தூக்கு மாட்டிக்கப் போய் இறக்கை வளைஞ்சுப் போச்சு. ஒரு பாட்டில் மாத்திரையை ஒரேடியா முழுங்கிட்டு ஒருநாள் முழுசும் ஆஸ்பத்திரியில கிடந்தாரு. மொட்டை மாடிக்கு போய் அங்கிருந்து குதிக்கப் பார்க்குறாரு. ஒரு நிமிஷம் கண் அசந்தாலும் ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு. நான் ஒத்தப் பொம்பளையா நாலு நாளா விடிய விடிய உக்கார்ந்து பார்த்துக்கிட்டிருக்கேன். நானும் இல்லைன்னா இந்த உசுரு அனாதையா போயிடும்” என்றார் பாத்திமா.
கும்பகோணம் அருகே உமையாள்புரத்தை சேர்ந்தவர் பாத்திமா. தஞ்சை மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளராக இருந்தவர், டிராஃபிக் ராமசாமியுடன் இணைந்து போராடுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்துவிட்டார். வழக்கு விபரங்களை பார்ப்பது தொடங்கி டிராஃபிக் ராமசாமியின் உடைகளை துவைப்பது வரை பரிவுடன் அருகில் இருந்து கவனித்துகொள்கிறார். இவர் தவிர பெரம்பலூர் அருகே நன்னை கிராமத்தில் இருந்து அவ்வப்போது வந்து ராம சாமியை கவனித்துகொள்கிறார் நல்லம்மாள். இவர் தனது கிராமத்தில் இருக்கும் ஏரியை மீட்கக் கோரி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
டிராஃபிக் ராமசாமியின் நிலைகுறித்து மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதியிடம் கேட்டபோது, “பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் டிராஃபிக் ராமசாமி போன்றவர்கள் மன உளைச்சலால் மனச் சிதைவு பாதிப்புக்கு ஆளாக நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒருவர் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் நிலையில் அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதுதான் பாதுகாப்பானது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT