Published : 18 Sep 2017 10:13 AM
Last Updated : 18 Sep 2017 10:13 AM
நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கத்தின்கீழ் இந்தாண்டு 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுவதால் 3 லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் சிறு தானியங்களும், 75 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு வகைகளும், 33 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்களும், 19 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தியும் கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பில் 44 சதவீதம் முழுவதும் பருவமழையை நம்பி, மானா வாரி முறையிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பான்மையான விவசாயி கள் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ளனர்.
மானாவாரி நிலங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள், துவரை, பாசிப் பயறு, உளுந்து போன்ற பயறு வகைகள், நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள், பருத்தி ஆகியன சாகுபடி செய்யப்படுகின்றன.
மானாவாரி நிலங்களில் பயிர் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இந்நிலையைப் போக்குவதற்காக பருவமழையை திறம்பட சேகரித்து, பல்வேறு தொழில்நுட்பங்களைப் பின்பற்றி, மானாவாரி பயிர் உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வரிசையில், ரூ.802 கோடியே 90 லட்சத்தில் ‘நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான விரைவுத் திட்டம்’ 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் தொகுப் பாக உள்ள மானாவாரி நிலங்களைக் கண்டறிந்து, ஒரு தொகுப்புக்கு 2,500 ஏக்கர் வீதம் நான்கு ஆண்டுகளில் 25 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நல்ல மழை
“இந்தாண்டு (2017-2018) 200 தொகுப்புகள் அமைக்கப்பட்டு காரிப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் மானாவாரி சாகுபடி சூடுபிடித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 500 ஏக்கரில் மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 2 ஆயிரத்து 500 ஏக்கரில் சிறுதானியங்கள், 65 ஆயிரம் ஏக்கரில் பயறுவகைப் பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் வித்துக்கள், 20 ஆயிரம் ஏக்கரில் பருத்தியும் பயிரிடப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 500 விதைப்பணி முடிந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் 70 ஆயிரம் ஏக்கரில் விதைப்பு மேற்கொள்ளப்படும்” என்று வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் காரிப் பருவத்தில் மட்டும் இத்திட்டத்தால் 37 ஆயிரத்து 500 ஏக்கர் அளவுக்கு கூடுதல் பரப்பு சாகுபடி செய்யப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 500 ஏக்கரிலும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 750 ஏக்கரிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 250 ஏக்கரிலும், திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 250 ஏக்கரிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 100 ஏக்கரிலும் கூடுதலாக மானாவாரி சாகுபடி செய்யப்படுகிறது. மொத்தம் 2 லட்சம் ஏக்கரில் சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT