Published : 05 Sep 2017 09:46 AM
Last Updated : 05 Sep 2017 09:46 AM
‘யா
தும் தமிழே’ விழாவுக்கான நாட்கள் நெருங்கி விட்டன. விழாவில் பங்கேற்பதற்கான பதிவுகள் குவிந்து வருவதிலிருந்தே வாசகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை அறிய முடிகிறது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்க விழா செப்டம்பர் 16-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர்.முத்தா கான்செர்ட் ஹாலில் தமிழோடு பின்னிப் பிணைந்த கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் ஒன்றுதான், ‘ராக்... தாளம்... பல்லவி!’. வழக்கமான இசை நிகழ்ச்சியாக இல்லாமல் புதுமையான இசைவிருந்து படைக்கவிருக்கிறார்கள் ‘ஊர்கா’ - ராக் இசைக் குழுவினர்.
அதென்ன பெயர் ‘ஊர்கா’
“ஊர்கா என்றால் ஊறுகாய் இல்லைங்க, ‘ஊருக்காக’ என்பதின் சுருக்கமே ஊர்கா. வித்தியாசமாக உங்கள் கவனத்தை ஈர்க்கவே அப்படி பெயர் வைத்துள்ளோம்...” என்று உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் பரத்.
“எங்கள் இசைக் குழுவில் நாங்கள் 4 பேர். நான் பாடகர் மற்றும் கீ போர்டு ஆர்ட்டிஸ்ட். ஜேசி கிடாரிஸ்ட். தபஸ் நரேஷ் டிரம்ஸில் பிரித்து மேய்வார். பிரதீப்குமார் பேஸ்-கிடாரிஸ்ட். இப்படியாக நாங்கள் 2014-ம் ஆண்டு தொடங்கியதுதான் ‘ஊர்கா’ இசைக்குழு. எங்கள் இசைக்குழுவின் கருத்தாக்கம் ஆழமானது. கட்டற்ற சுதந்திரம் கொண்டது. வயலில் உழைப்பவர் தொடங்கி, கணினியில் பணிபுரிபவர் வரைக்கும் எல்லோருக்கு மானது. சுருக்கமாக மக்களுக்கானது.
கடந்த ஆண்டிலிருந்து நாங்கள் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் கிராமம்தோறும் சென்று பாடி வருகிறோம். ஒரு கிராமத்தின் முச்சந்தியிலோ அல்லது கடற்கரை மணலிலோ இசைக்கத் தொடங்குவோம். மக்கள் ஓரிருவராகக் கூடத் தொடங்குவார்கள். நேரம் செல்லச் செல்ல கிராமத்தின் பாதிக் கூட்டம் எங்களை மொய்த்திருக்கும். உற்சாகமாகக் கைதட்டுவார்கள். சிறிது நேரத்தில் அவர்களும் எங்களுடன் சேர்ந்து பாடுவார்கள்; ஆடுவார்கள் என்றார்.
திரைப்படப் பாடல்களைப் பாடாமல் சொந்தமாகப் பாட்டு எழுதி இசைப்பது ‘ஊர்கா’ குழுவின் சிறப்பம்சம். கடந்த மார்ச் மாதம் ரேடியோ சிட்டி எஃப்.எம். தேசிய அளவில் நடத்திய போட்டியில் ‘பெஸ்ட் ராக் ஆர்ட்டிஸ்ட்’ விருதை ‘ஊர்கா’ வென்றுள்ளது.
“விருதெல்லாம் வாங்கியிருக்கிறீர்கள்... பாடல்களில் ஏதாவது கருத்து சொல்வீர்களா?” என்று கேட்டோம். “சத்தியமாக கருத்தெல்லாம் சொல்ல மாட்டோம். அந்த நேரத்தில் எது எங்களையும் இந்த சமூகத்தையும் பாதிக்கிறதோ அதை வரிகளாகப் போட்டுப் பாடுவோம். ஆனால், அதில் உண்மை இருக்கும். கேட்பவர்களைச் சந்தோஷப்படுத்தும்... ‘தி இந்து’-வின் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சிக்காக நிறைய திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் பரத்.
விவரங்களுக்கு: www.yaadhumthamizhe.com
பதிவுக்கு: SMS, THYT
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT