Published : 07 Apr 2023 06:16 AM
Last Updated : 07 Apr 2023 06:16 AM
மதுரை: தேசிய அளவில் தமிழக தோட்டக்கலைத் துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் நிலையில் வேளாண் துறையுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை தனித்தனியாக செயல்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், மருத்துவப் பயிர்கள், அலங்காரச் செடிகள், மலர்கள் உள்ளிட்டவை தோட்டக்கலைப் பயிர்கள்.
இவற்றுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள், தகவல்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது, மகசூலை அதிகரித்து அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட பணிகளைத் தோட்டக்கலைத் துறை மேற்கொள்கிறது.
வேளாண் பயிர்களுடன் ஒப்பிடும்போது தோட்டக்கலை பயிர்கள் விவசாயிகளுக்கு அதிக வருவாய் தரக்கூடியவை. அதனாலேயே 1979-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் தோட்டப் பயிர்களுக்கென தனித்துறை உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக ஆட்சியில்தான் இத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
2007-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வேளாண் விஞ்ஞானிகள் குழுவினரின் பரிந்துரை அடிப்படையில் தோட்டக்கலைத் துறையில் அதிக பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
இத்துறை தொடங்கியபோது வெறும் 7 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே தோட்டக்கலைப் பயிர் சாகுபடி நடந்தது. தற்போது 16 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
தோட்டக்கலைத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கி அமைச்சருடன் செயல்படும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்கள் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தனி அமைச்சகம் இல்லை.
தோட்டக்கலைத் துறையில் கடந்த காலத்தில் 1,625 அலுவலர்கள் பணியாற்றினர். தற்போது மற்ற துறைகளைப் போல் 50 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. ஆனாலும், தேசிய அளவில் தோட்டக்கலைத் துறையில் பல்வேறு பிரிவுகளில் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மலர்கள் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் காலிப்பணியிடங்களை நியமித்தால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கருதி வேளாண் துறையையும் தோட்டக்கலைத் துறையையும் ஒன்றாக இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இத்துறையை வேளாண் துறையோடு இணைக்காமல் தற்போது உள்ளதுபோல் தொடர நடவடிக்கை எடுக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர்கள் எதிர்பார்கிறார்கள்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூறியதாவது: வேளாண் துறையுடன் இணைக்க 115 உதவித் தோட்டக்கலை அலுவலர்களை வேறு வட்டாரம் அல்லது வேறு மாவட்டங்களுக்கு பணி ஒப்பளிப்பு செய்ய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இரு துறைகளையும் இணைத்தால் தோட்டக்கலைத் துறை நுணுக்கங்கள், விவசாயிகளுக்கு வழிகாட்டுதலில் குளறுபடிகள் ஏற்படும். தோட்டக்கலை சார்ந்த படிப்புகளைப் படித்தோருக்கு மட்டுமே அது சார்ந்த தொழில்நுட்பம் தெரியும்.
அதுபோல், நெல் உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்நுட்பம் தோட்டக்கலை அலுவலர்களுக்குத் தெரியாது. தற்போது தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ தோட்டக்கலைத் துறை பயிர்கள் சொட்டு நீர்ப் பாசனம் உள்ளிட்ட உயர் தொழில் நுட்பத்தில் சாகுபடி குறையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. தற்போது ஊட்டச்சத்தில் தன்னிறைவை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.
இந்தச் சூழலில் வேளாண் துறையுடன் தோட்டக்கலைத் துறையை இணைப்பது மறைந்த முதல்வர் கருணாநிதியின் எண்ணங்களுக்கு மாறானது. அப்படி ஒன்றாக இணைத்தால் தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியில் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
தனியார் துறையில் தோட்டக் கலைத் துறைக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதால் வேளாண் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இத்துறைகளை இணைப்பதால் வேலைவாய்ப்புக் குறைவதோடு தோட்டக்கலை, வேளாண் படிப்புகள் படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT