Last Updated : 17 Sep, 2017 11:01 AM

 

Published : 17 Sep 2017 11:01 AM
Last Updated : 17 Sep 2017 11:01 AM

தமிழ் புத்தி வேடிக்கை பார்ப்பதுதான்: எழுத்தாளர் நாஞ்சில் நாடன் காட்டம்

தமிழ் புத்தி வேடிக்கை பார்ப்பதுதான். சொரணை இல்லை என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கி.ரா.பிறந்த நாள் விழாவில் காட்டமாகப் பேசினார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95வது பிறந்த நாள் விழாவையொட்டி சனிக்கிழமை இரவு புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கி.ரா.வின் பேத்தியின் திருமண வரவேற்பும் நடந்தது. அதைத்தொடர்ந்து திரைப்படக்கலைஞர் சிவகுமாரின் ஓவியங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து 'கி.ரா. கடிதங்கள்', 'பிஞ்சுகள்', 'கி.ரா. 95- முடிவில்லா பயணம்' ஆகிய மூன்று நூல்களை நீதிபதி மகாதேவன் வெளியிட அந்நூல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையில் பேசுகையில், "கிராமத்திலிருந்து இலக்கியம் படைத்தவர்கள் பலர். இடைச்செவல் கிராமத்திலிருந்து இலக்கியத்தின் உச்சத்தில் சென்றடைந்தார். சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. ஞானபீட விருது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். தமிழில் ஜெயகாந்தனுக்கு பிறகு யாருக்கும் தரவில்லை. தமிழகம் புறக்கணிப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திரைக்கலைஞர் கமலஹாசன் உள்பட பலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

நூல் ஆய்வுரையாக கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், "படைப்பாளி விமர்சகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உலக அளவில் கொண்டாடத் தகுதியுடைய எழுத்தாளர் கி.ரா. எனது நிலத்தின் குரலை அவரது எழுத்தில் கேட்பேன். கி.ரா. கடிதங்களை வாசிப்பதே சுகம் என கூறவேண்டும். அது சமூக ஆவணம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் உலக இலக்கியத்தில் சிறப்பிடம் பெறும்" என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில், "கன்னடக்காரன் படிக்கிறான். அதனால் அங்குள்ள எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இங்கு படித்திருந்தால் நாஞ்சில் நாடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டிருப்பான். அதனால்தான் தைரியமாக எழுதுகிறேன். 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் டாக்டர் பட்டம் பெறலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப் பெறலாம். டாக்டர் பட்டத்தை வைத்து நான் நாக்கு வழிக்கவா? மொழியை ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் கடத்திக் கொண்டிருப்பவன் எழுத்தாளன்தான். பேராசிரியர்கள் அல்ல. கி.ரா. படைப்பை மொழி பெயர்ப்பது கடினம். அதனால் உலக மொழிகளுக்குச் செல்ல முடியவில்லை.பெரிய குறைகள் உண்டு. எம்டி வாசுதேவன் நாயருக்கு விருது கிடைத்தால் அவர் வீட்டின் முன்பு முதல்வர் நிற்கிறார். கி.ரா. வீட்டுக்கு ஏதாவது ஒரு அமைச்சர் வந்துள்ளாரா? அந்த சொரணை இங்கு இல்லை. தமிழ் புத்தி வேடிக்கை பார்ப்பதுதான்.

என் மிச்ச வாழ்நாளை எழுத்தாளர் கி.ரா.வுக்கு தரத் தயாராக இருக்கிறேன். வாசிப்பு இங்கு இல்லை. பல பிரபல எழுத்தாளர்கள் நூல்கள் நூறுதான் அச்சடிக்கப்படுகிறது. கி.ரா. தமிழ் இந்துவில் எழுதும் தொடரில் பல தகவல்கள் உள்ளன. அதில் மருத்துவம், விவசாய சார்ந்த தகவல்கள் உள்ளன.

ஞானபீட விருது உட்பட பல விருதுகள் சில்லறை பாடு. பெரிய தலைவர்கள் இங்கு வரும்போது தமிழறிஞரை, பெரிய எழுத்தாளரை, இசையறிஞரைப் பார்க்கலாம். ஆனால், ஏன் நடிகர் ரஜினிகாந்தை சென்று பார்க்கிறார். ஞானபீட விருது கிடைத்தால்கூட எழுத்தாளர் கி.ரா. முதல்வர் வீ்ட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். காலுக்கு கீழ் குடம், குடமாய் பொற்காசு கொட்டி கிடப்பதை அறியாமல் டாலர் பிச்சை கேட்டு நிற்கிறோம். கொஞ்சம் யோசியுங்கள்" என்று நாஞ்சில் நாடன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x