Published : 02 Sep 2017 09:25 AM
Last Updated : 02 Sep 2017 09:25 AM
விபத்துகளைக் குறைக்க சாலை வசதிகளை மேம்படுத்தாமல் விதிமுறைகளை மட்டும் கடுமையாக்கினால் போதுமா என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துகளில் 17,218 பேர் இறந்துள்ளனர். இதில் 50 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சாலைகளும், இருக்கும் சாலைகளை மேம்படுத்தாமலும் விட்டதன் விளைவே இதற்கு காரணம்.
சுங்க வரி வசூலிக்கப்படும் பல நெடுஞ்சாலைகள் கிராமச் சாலைகளைவிட மோசமாக இருக்கின்றன. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், கிருஷ்ணகிரி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
கட்டமைப்பு வசதி
கடந்த ஆண்டில் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா சாலையில் 400 பேரும், வாலாஜா - கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 500 பேரும் விபத்துகளில் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சாலைகளை மேம்படுத்தாமல் விதிமுறைகளைக் கடுமையாக்கினால் மட்டும் விபத்துகளைக் குறைக்க முடியாது. பெரும்பாலான சாலைகள் மேடு, பள்ளங்களாக இருக்கின்றன. இரவில் போதிய அளவில் மின்விளக்குகள் இல்லை.
சென்னை அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேடு பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தவறி விழுகிறார்கள். மழை நீர் செல்வதற்கும் வசதி இல்லை. பல்வேறு துறைகள் சார்பில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு கிடக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அதுகுறித்த எச்சரிக்கை பலகை கூட இல்லை.
பளிச்சென்று தெரியும்படி ஒளிரும் வர்ணம் பூசப்பட வேண்டிய வேகத் தடைகள் இரவில் தெரிவதே இல்லை. விதிமுறைப்படி 40 மீட்டருக்கு முன்பாக இருக்க வேண்டிய வேகத்தடை, முக்கிய வளைவுகள் குறித்த எச்சரிக்கை பலகைகள் பல இடங்களில் இல்லவே இல்லை. இதுபோல விதிப்படி செய்ய வேண்டியவற்றை முழுமையாகச் செய்யாமல் அதிக அபராதம் விதிப்பது வாகன ஓட்டுநர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்மார்ட் கார்டு திட்டம்
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தில் முறைகேட்டை தடுக்கும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை 2008-ம் ஆண்டு போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியது. இதற்காக, சென்னை திருவான்மியூர், சிவகங்கை மற்றும் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ‘ஸ்மார்ட் கார்டு' முறை சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்டது. வாகன ஓட்டிகளின் முழு விபரங்களை இதன்மூலம் அறிய முடியும். சாலை விதியை மீறியது, விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட விவரங்களையும் பெற முடியும்.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வாகன ஓட்டிகள் எளிமையாக பயன்படுத்தவும், சோதனையின்போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் முழு தகவல்களையும் இந்த ஸ்மார்ட் அட்டை மூலம் பெற முடியும். இதனால், வெளிப்படை தன்மையும் இருக்கும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ஸ்மார்ட் கார்டு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT