Published : 06 Apr 2023 07:06 PM
Last Updated : 06 Apr 2023 07:06 PM
கோவை: கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே பாரத்' ரயில் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்னை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவை-சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே பாரத்' ரயில்கள் இயங்கும் நேரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை வரும் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். இந்நிலையில், வரும் 9-ம் தேதி முதல் இந்த ரயில் இயங்கும் நேரங்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ''கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு சென்றடைந்து, காலை 6.37 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்படும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு சென்றடைந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்-கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20643), மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்தடைந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, இரவு 7.15 மணிக்கு புறப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும்: இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "அட்டவணைப்படி இந்த ரயில் கோவையில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். மொத்தம் 8 ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயிலில் 536 இருக்கைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, பெட்டிகளின் எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கப்படும். சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும். இந்த ரயிலின் பராமரிப்புப் பணிகள் கோவையில் நடைபெறும்" என்றனர்.
திருப்பதி ரயில் நேரம் மாற்றம்? - தற்போதுள்ள ரயில்வே அட்டவணையின்படி கோவை-திருப்பதி இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் (எண்: 22616), காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வகையில் உள்ளது. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களையும் இயக்க முடியாது என்பதால், 'வந்தே பாரத்' ரயிலுக்கு முன்னுரிமை அளித்து, திருப்பதிக்கு செல்லும் ரயில் கோவையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படலாம். இதுதொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு இன்னும் வரவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT