Published : 06 Apr 2023 05:39 AM
Last Updated : 06 Apr 2023 05:39 AM

நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன்தான்; நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு நிச்சயம் அனுமதி அளிக்காது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார்மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அங்கு விவசாய நிலங்கள் இருப்பதால், ஏல அறிவிக்கை நடவடிக்கையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கத்துக்கான ஏல அறிவிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அதன் மீது விவாதம் நடந்தது. டிஆர்பி ராஜா (திமுக), ஆர்.காமராஜ் (அதிமுக), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), ஆர்.வைத்திலிங்கம் (அதிமுக முன்னாள் அமைச்சர்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் பேசும்போது, ‘‘மத்திய அரசின் ஏல அறிவிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

பாஜக சார்பில் பேசிய வானதி சீனிவாசன், ‘‘மத்திய அரசின் சட்டத்தின் கீழ் ஏலம் என இருந்தாலும், நிலம் என வரும்போது உள்ளூரில் உள்ள வருவாய் துறைதான் முறையாக அனுமதி தரும். அப்படி இருக்க, மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை இதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுபற்றி மத்தியஅரசுக்கு அவர்கள் ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘3 இடங்களுக்கான ஏலத்தை மாற்ற வேண்டும், அறிவிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக சார்பில் மத்திய நிலக்கரி அமைச்சருக்கு கடிதம் அளித்துள்ளோம். நாங்கள் இதை தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழகத்தின் முக்கியமான உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில்அவை உறுப்பினர்களின் அதேஉணர்வுதான் முதல்வருக்கும்உள்ளது. ஏல அறிவிப்பில்தமிழகத்தின் சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய பகுதிகள் உள்ளன என்பதைஅறிந்ததும், முதல்வர் உடனே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இத்தகைய அறிவிப்பை நிலக்கரி அமைச்சகம் வெளியிடுவதற்கு முன்பு தமிழக அரசிடம் கலந்துபேசாமல், ஒப்புதல், அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அறிவித்தது துரதிர்ஷ்டவசம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரியலூர் மைக்கேல்பட்டி என்பது அதிகமாக நெல் விளையும் பகுதி என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், அந்த கடிதத்தில், வேளாண் பாதுகாப்பு சட்டப் பிரிவையும் சுட்டிக்காட்டி, புதிய திட்டங்கள், செயல்பாட்டை மேற்கொள்ள கூடாது என்பதையும் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் கடிதம் சென்றதும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளும், நிலக்கரி அமைச்சக அதிகாரிகளை தொடர்புகொண்டு, மேல் நடவடிக்கைகளை கைவிட்டு, 3 இடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு ஒருபோதும் இதை அனுமதிக்காது என்று, திருவாரூரில் இருந்த அமைச்சர் உதயநிதியும் தெரிவித்தார். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம்கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களும் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

அதேநேரம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான சட்டத்தில் எவற்றையெல்லாம் விட்டுவிட்டனர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கூறி அரசியலாக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நிலக்கரி சுரங்கத்துக்கான ஏல அறிவிப்பு செய்தியை கேட்டு, உங்களை போல நானும் அதிர்ச்சியடைந்தேன். அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அத்துடன், டெல்லியில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அந்த கடிதத்தின் நகலை அனுப்பி, உடனே சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அந்த கடிதத்தை தரவேண்டும் என்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். நேரில் சந்திக்க இயலாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘‘தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்துக்கு நிச்சயம் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம்’’ என்று மத்திய அமைச்சர் உத்தரவாதம் அளித்ததாக டி.ஆர்.பாலு என்னிடம் தெரிவித்தார்.

நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால், இதில் நான் உறுதியாக இருப்பேன். எக்காரணம் கொண்டும், தமிழக அரசு இதற்கு நிச்சயமாக அனுமதி அளிக்காது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x