Published : 06 Apr 2023 05:55 AM
Last Updated : 06 Apr 2023 05:55 AM
சென்னை: நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காவிரி டெல்டா பகுதிகளில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் வேளாண் நிலங்கள் அழிந்து, அந்தப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் அப்புறப்படுத்தும் சூழல் உருவாகும்.
டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நாங்கள் அறிவித்தோம். அங்கு விவசாயிகளைப் பாதிக்கும் எந்த தொழிற்சாலையையும் அமைக்கக் கூடாது. ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே 3 இடங்களில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்த டெண்டர் விடும் அறிவிக்கை, விவசாயிகளிடையே வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2006-2011-ல் திமுக ஆட்சியில்தான் மீத்தேன் எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. திமுக ஆட்சியில்தான், விவசாயிகளைப் பாதிக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தனர். அப்போதிலிருந்து தற்போது வரை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போதே இதை தடுத்திருந்தால், தற்போது மத்திய அரசு இப்படிப்பட்ட திட்டத்தை தமிழகத்திலே அமல்படுத்தியிருக்க மாட்டார்கள்.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுத்து, பிரச்சினையை எழுப்ப வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.
விவசாயிகள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல், தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT